மஹாராஷ்டிரா தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது பா.ஜ., மேலிடம்
மஹாராஷ்டிரா தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது பா.ஜ., மேலிடம்
ADDED : அக் 21, 2024 01:05 AM

மும்பை : மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலில் போட்டியிடும், 99 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை, பா.ஜ., மேலிடம் நேற்று வெளியிட்டது.
இதில், துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மாநில பா.ஜ., தலைவர் சந்திரசேகர் பவான்குலே உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
23ல் ஓட்டு எண்ணிக்கை
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது; 288 சட்டசபை தொகுதிகளுடைய இம்மாநிலத்தில், நவ., 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; நவ., 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்., - காங்., அடங்கிய, 'மகா விகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில், இரு கூட்டணி கட்சிகளுமே மும்முரம் காட்டி வருகின்றன.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பா.ஜ., இந்த முறை 160 தொகுதி களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மீதமுள்ள தொகுதிகளை, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கும் வழங்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலில் போட்டியிடும், 99 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை, பா.ஜ., மேலிடம் நேற்று வெளியிட்டது.
ஆறு வேட்பாளர்கள்
இதன்படி, பா.ஜ., மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ், நாக்பூர் தென்மேற்கு தொகுதியிலும்; மாநில பா.ஜ., தலைவர் சந்திரசேகர் பவான்குலே, கம்தி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரசில் இருந்து கடந்த பிப்ரவரியில் விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா சவான், போகர் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாநில அமைச்சர் சுதிர் முங்கந்திவார், பல்லார்பூர் தொகுதியிலும்; மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வேயின் மகன் சந்தோஷ், போகர்தான் தொகுதியிலும் பா.ஜ., வேட்பாளராக களமிறக்கப்பட்டுஉள்ளனர்.
மும்பை பா.ஜ., தலைவர் ஆஷிஷ் ஷெலார் வாந்த்ரே மேற்கு தொகுதியிலும், மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கோத்ருத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், 13 பெண் வேட்பாளர்களும், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்களும், பட்டியலினத்தைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.