கவுரி லங்கேஷ் வழக்கில் சிக்கியவருக்கு சிவசேனாவில் பதவி வழங்க தடை
கவுரி லங்கேஷ் வழக்கில் சிக்கியவருக்கு சிவசேனாவில் பதவி வழங்க தடை
ADDED : அக் 21, 2024 06:48 AM

மும்பை : பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய நபருக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் பதவி வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவருக்கு கட்சியில் பதவி வழங்க தடை விதிக்கப்படுவதாக சிவசேனா அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். இவரை 2017 செப்., 5ல் பைக்கில் வந்த இரு நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த வழக்கில் கர்நாடக போலீசார் பலரை கைது செய்துள்ளனர். அதில் மஹாராஷ்டிரா மாநிலம், ஜால்னா நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீகாந்த் பங்கர்கரும் ஒருவர்.
இவர் ஒன்றிணைந்த சிவசேனாவில், 2011 வரை உறுப்பினராக இருந்தார். பின், தேர்தலில் போட்டியிட சிவசேனாவில் சீட் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகி ஹிந்து ஜன்ஜாக்ருதி சமிதி என்ற அமைப்பில் சேந்தார். 2018 ஆகஸ்டில் கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பரில் தான் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் மஹாராஷ்டிரா சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஸ்ரீகாந்த் பங்கர்கர் 18ம் தேதி சிவசேனா முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோட்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவரை ஜால்னா தொகுதியின் தேர்தல் பிரசார குழு தலைவராக அர்ஜுன் கோட்கர் பரிந்துரைத்தார்.
இது சர்ச்சையான நிலையில், 'ஸ்ரீகாந்த் பங்கர்கருக்கு ஜால்னா மாவட்டத்தில் ஏதேனும் பதவி வழங்கப்பட்டிருந்தால், அதற்கு தடை விதிக்கப்படுகிறது' என அறிக்கை வெளியிட்டுள்ளது.

