'மஹாராஷ்டிரா அதிகாரிகள் கர்நாடகாவுக்குள் நுழைய கூடாது'
'மஹாராஷ்டிரா அதிகாரிகள் கர்நாடகாவுக்குள் நுழைய கூடாது'
ADDED : ஜன 18, 2024 05:16 AM
பெலகாவி: “மஹாராஷ்டிர அரசு அதிகாரிகள், கர்நாடகாவில் நுழைய கூடாது,” என, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா - மஹாராஷ்டிரா இடையே, பெலகாவி எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. பெலகாவி தன்னுடையது என, மஹாராஷ்டிரா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் மஹாஜன் ஆணைய அறிக்கைப்படி, பெலகாவி, கர்நாடகாவின் பிரிக்க முடியாத அங்கம் என, கர்நாடகா வாதிடுகிறது.
வட மாவட்ட மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பெங்களூரில் உள்ள விதான்சவுதா போன்று, பெலகாவியில் சுவர்ண விதான்சவுதாவும் கட்டியது.
ஆனாலும் மஹாராஷ்டிரா தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறது. இதற்கிடையில் பெலகாவியின், மராத்தி மொழியினர் அதிகம் வசிக்கும் 865 கிராமங்களை உரிமை கொண்டாட மஹாராஷ்டிரா முயற்சிக்கிறது. இந்த கிராமங்களில் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, மஹாராஷ்டிரா அரசு தயாராவதாக கூறப்பட்டது.
இதைத் தீவிரமாக கருதிய முதல்வர் சித்தராமையா, பெலகாவியில் நேற்று கூறுகையில், “மஹாராஷ்டிரா அரசு அதிகாரிகள், கர்நாடகாவில் நுழையக் கூடாது என, மஹாராஷ்டிரா தலைமைச் செயலரிடம், நான் கூறியுள்ளேன். இதுகுறித்து, நமது தலைமைச் செயலருக்கும் உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்.