பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்: 'மாஜி' முதல்வர் மனு தள்ளுபடி
பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்: 'மாஜி' முதல்வர் மனு தள்ளுபடி
UPDATED : செப் 29, 2026 10:15 PM
ADDED : செப் 29, 2026 09:53 PM
ஆமதாபாத்: பிரதமர் மோடியின் கல்லுாரி பட்டப்படிப்பு விபரங்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் கமிஷனின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விபரங்களை வெளியிடும்படி, 2016ல், மத்திய தகவல் கமிஷனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினார். இதை பரிசீலித்த கமிஷன், மோடியின் கல்வித் தகுதி தொடர்பான தகவல்களை வழங்கும்படி, டில்லி பல்கலை மற்றும் குஜராத் பல்கலைக்கு உத்தவிட்டது.
இதை எதிர்த்து, குஜராத் பல்கலை தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, தகவலறியும் உரிமை சட்டத்தின் விதிகளை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, கெஜ்ரிவாலுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, மத்திய தகவல் கமிஷனின் உத்தரவையும், 2023 மார்ச்சில் ரத்து செய்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த, தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், நீதிபதி டி.என்.ரே ஆகியோர் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும், சூழ்நிலைகளையும் முழுமையாக ஆராய்ந்ததில், தனி நீதிபதியின் உத்தரவில் எந்த பிழையும் இல்லை. எனவே, இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட அமர்வு, கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் உறுதி செய்தது.
