தேர்தல் கமிஷன் மீது ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவதா? ராகுலுக்கு மாஜி நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள் கண்டனம்
தேர்தல் கமிஷன் மீது ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவதா? ராகுலுக்கு மாஜி நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள் கண்டனம்
ADDED : நவ 19, 2025 11:05 PM

'தேர்தல் கமிஷன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்துவதை காங்., - எம்.பி., ராகுல் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது அரசியல் சாசன அமைப்பின் செயல்பாடுகளை பலவீனப்படுத்தி விடும்.
'மேலும், தேர்தல் கமிஷனை குற்றஞ்சாட்டுவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்' என, முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொண்டது முதலே, பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் கமிஷன் ஓட்டு திருட்டில் ஈடுபட்டு வருவதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதற்காக பீஹாரில் 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசார பயணத்தையும் மேற்கொண்டார். பீஹாரில் சட்டசபை தேர்தல் முடிந்து லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணி படுதோல்வி அடைந்தது.
கடிதம்
இந்த தேர்தல் முடிவுகள் நம்பும்படியாக இல்லை என்றும் விரைவில் தரவுகளை ஆராய்ந்து உண்மைகளை வெளிப்படுத்துவோம் என்றும் காங்., கருத்து தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், நாட்டின் அரசியல் சாசன அமைப்பின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தும் போக்கை ராகுலும், காங்., கட்சியும் கைவிட வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, 16 முன்னாள் நீதிபதிகள், 123 முன்னாள் அரசு உயரதிகாரிகள், 133 முன்னாள் ராணுவ அதிகாரிகள் உட்பட, 272 பேர் அடங்கிய குழுவினர் கையெழுத்திட்டு வெளிப்படையாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
நாங்கள் இந்த சமூகத்தின் மூத்த குடிமக்கள். விஷமத்தனமான அரசியலுக்காக நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. ஆக்கபூர்வமான கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்காமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் செய்கின்றனர்.
ஏற்கனவே, தேசத்தின் பல்வேறு துறைகள் மீது குற்றஞ்சாட்டியவர்கள், தற்போது தேர்தல் கமிஷன் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அதன் நம்பகத்தன்மையை மக்கள் மனதில் இருந்து அழிக்க முற்படுகின்றனர்.
வலுவான ஆதாரங்கள் இல்லாமல், ஓட்டு திருட்டு நடந்ததாக தேர்தல் கமிஷன் மீது ராகுல் தவறான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.
தேர்தல் கமிஷன் மீது பழி சுமத்தி, அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக ராகுல் கூறி வருகிறார். குற்றச்சாட்டுகளை அடுக்குகிறாரே தவிர, அதற்காக எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து தேர்தல் கமிஷன் தெளிவாக விளக்கி இருக்கிறது. நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்றே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்கி, தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் பா.ஜ.,வின் 'பி டீம்' போல, தேர்தல் கமிஷன் செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அச்சுறுத்தல்
அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்ததால் ஏற்பட்ட விரக்தியில், இப்படி மோசமாக விமர்சிக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரம், தேர்தலில் சாதகமான முடிவுகள் வந்தால், தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டுகள் காணாமல் போவதும், தோல்வி அடைந்தால் மீண்டும் குற்றஞ்சாட்டுவதும் நல்லதல்ல.
எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு அதிருப்திகள் இருந்தாலும், இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் அரசியல் சாசன அமைப்புகளுக்கு வலு சேர்த்தனர்.
ஆனால், இப்போது பொது வாழ்வில் இருப்பவர்கள் அப்படி இல்லை. வீண் பழி சுமத்தி, தேர்தல் கமிஷன் போன்ற அரசியல் சாசன அமைப்புகளை பலவீனப்படுத்தி விடுகின்றனர்.
போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டும் போக்கை அரசியல் கட்சிகளும், தலைவர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
போலி வாக்காளர்கள், குடியுரிமை இல்லாதவர்கள் தேர்தலில் வாக்களிப்பது, நம் தேசத்தின் இறையாண்மைக்கு மிக மோசமான அச்சுறுத்தல் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
-நமது டில்லி நிருபர்-:.

