UPDATED : ஜன 11, 2024 06:41 PM
ADDED : ஜன 07, 2024 11:44 PM

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு அமைச்சர்களுக்கு எதிராக இந்தியர்கள் கொந்தளித்ததை தொடர்ந்து, அமைச்சர்களை 'சஸ்பெண்ட்' செய்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி நாடு மாலத்தீவு. நம் மேற்கு கடற்கரையில் இருந்து 555 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இயற்கை அழகு மிகுந்த இடம் என்பதால் சர்வதேச சுற்றுலாபயணியர் மொய்க்கின்றனர். அவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் சீன ரசிகரான முகமது முய்சு வெற்றி பெற்று அதிபரானார். பதவிக்கு வந்ததுமே இந்தியாவுடன் இருந்த நட்பு இழைகளை துண்டிக்க துவங்கினார். சீனாவுடன் நெருக்கமானார்.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவு சென்றார். இது கேரளாவுக்கு மேற்கே இந்திய பெருங்கடலில் உள்ள யூனியன் பிரதேசம்.
கொச்சிக்கும் லட்சத்தீவுக்கும் இடையே ஆழ்கடலில், 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' பதிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். லட்சத்தீவு வளர்ச்சிக்கான கட்டமைப்பு திட்டங்களையும் துவக்கினார்.
ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் வாக்கிங் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார் மோடி.
அந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 'சாகச சுற்றுலா விரும்புவோருக்கான இடம் இது' என்று வர்ணித்தார். இணையத்தில் மோடியை பல கோடி பேர் பின்பற்றுவதால், லட்சத்தீவுக்கு அட்டகாசமான விளம்பரம் கிடைத்தது.
''அடடா, இந்தியாவிலேயே இவ்வளவு அழகான தீவுகள் இருக்கும்போது, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கு ஏன் போக வேண்டும்?” என சிலர் கேட்டனர்.
அந்த கருத்து தீயாக பரவியது. இதுவரை நட்புடன் இருந்த மாலத்தீவு அரசு இப்போது சீனாவின் கைத்தடியாக மாறி விட்டதால் “மாலத்தீவை தவிர்ப்போம்” என்ற கோஷம் வலு அடைந்தது.
இது மாலத்தீவு அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் என்பவர், பிரதமர் மோடியின் பயணத்தை விமர்சித்தும், தனிப்பட்ட முறையில் அவரை
விமர்சித்தும் சமூக வலைதளத்தில் பதிவிடடார். பலத்த எதிர்ப்பு எழுந்ததும் பதிவை நீக்கினார்.
மால்ஷா ஷரீப் என்ற அமைச்சர், 'சுற்றுலாவில் எங்களுடன் இந்தியா மோத முடியுமா? நாங்கள் அளிக்கும் சேவையை வழங்க முடியுமா? இந்திய ஓட்டல் அறைகளில் வரும் நாற்றத்தை யாரால் சகிக்க முடியும்?' என பதிவு போட்டார். மரியம் ஷியுனா என்ற பெண் அமைச்சரும் நமது பிரதமரை கேலி செய்திருந்தார்.
மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் இதை பலமாக கண்டித்தார். “நமது நீண்டகால நண்பனான இந்தியாவை இழிவு படுத்தும் விதமாக அமைச்சர்களே பதிவிடுவது வெட்கக்கேடு. அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
அமைச்சர்களின் கேலியும் கிண்டலும் இந்தியாவில் மக்களின் கோபத்தை கிளறியது. பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல டிக்கெட்டும் ஓட்டல் ரூம்களும் பதிவு செய்திருந்த இந்தியர்களில் பலரும் பயணத்தை ரத்து செய்தனர்.
இதனால் மாலத்தீவு அரசு மிரண்டு போனது. வெறும் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கும் அண்ட நாடு, முற்றிலும் சுற்றுலாவை நம்பி வாழ்கிறது. அமைச்சர்களின் வாய்க்கொழுப்பால் வாழ்வாதாரம் பள்ளத்தில் விழும் என மக்கள் பயந்தனர். என்ன செய்வது என தெரியாமல் முழித்த அரசு, பின்னர் ஓர் அறிக்கை வெளியிட்டது.
”இந்தியா குறித்து சில தனிநபர்கள் வெளியிட்ட பதிவுகளுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை. இந்த கருத்துக்களை அரசு ஏற்கவில்லை” என்று அறிக்கையில் கூறியது. சற்று நேரத்தில், இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என அறிவிப்பு வெளியானது.