ADDED : பிப் 16, 2024 06:53 AM

வரலாற்று பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் திருவிழா துவங்கியுள்ளது. மற்ற கோவில்களை விட இந்த கோவில் திருவிழா மாறுபட்டதாகும். இதில் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டால், விரும்பியது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது, பக்தர்களின்நம்பிக்கையாகும்.
மைசூரு மாவட்டம், கோவில்கள் சூழ்ந்துள்ள நகராகும். வரலாற்று பிரசித்தி பெற்ற, புராதன கோவில்கள் இங்குள்ளன. கோவில்களின் திருவிழாக்கள், பக்தர்களை ஈர்க்கின்றன. ஒவ்வொரு திருவிழாவுக்கும், அதனுடையதேயான சிறப்பு, மகத்துவம் உள்ளது.
அதேபோன்று, முடுகுதொரே மல்லிகார்ஜுன சுவாமி திருவிழாவும் தனித்துவம் பெற்றுள்ளது. பிப்ரவரியில் துவங்கிய திருவிழா, 27ம் தேதி வரை நடக்கும்.
அன்னதானம், கொடியேற்றம், கிரிஜா கல்யாணம், கஜாரோஹணம், பிரம்ம ரத உற்சவம், சித்ர ரத உற்சவம், சயனோத்சவம், பூ பல்லக்கு உற்சவம், கைலாச வாகன உற்சவம்.
கிரிவலம், மஹாபிஷேகம், மாடுகள் திருவிழா, மண்டபோற்சவம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். பிப்ரவரி 18ல் மல்லிகார்ஜுன ரத உற்சவம் நடக்கவுள்ளது. இதை பார்க்க பக்தர்கள் பெருமளவில் திரண்டு வருவர்.
முடுகுதொரே மல்லிகார்ஜுன சுவாமி குடி கொண்டுள்ள கோவில், 300 அடி உயரமான மலை மீது அமைந்துள்ளது. மலை மீது ஏறிச்செல்ல படிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில் கங்கர்கள் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். சிறிதாக கட்டப்பட்ட கோவில், நாளடைவில் படிப்படியாக விரிவடைந்தது. கருவறை, மண்டபங்கள் உள்ளன.
துவாரகா யுகத்தில், கவுரவர்களின் சதியால், நாட்டை இழந்து வனவாசம் புறப்பட்ட பாண்டவர்கள், சோமகிரி, அதாவது இன்றைய முடுகுதொரேவுக்கு வந்தனர். இப்பகுதியின் இயற்கை அழகால் ஈர்க்கப்பட்ட அர்ஜுனன், லிங்க வடிவத்தில் இருந்த சிவபெருமானை பார்த்து மகிழ்ந்தார். லிங்கத்தை மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்து பூஜித்து, வேண்டிய வரத்தை பெற்றதாக ஐதீகம். மல்லிகையால் பூஜித்ததால், இந்த கோவிலுக்கு மல்லிகார்ஜுன சுவாமி என, பெயர் வந்ததாம்.
முடுகுதொரே திருத்தலம், டி.நரசிபுராவில் இருந்து 19 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு காவிரி ஆறு, மேற்கில் இருந்து, வடக்கில் பாய்ந்து, கிழக்கில் பிரிந்து, தெற்கில் நுழைகிறது. முடுகுதொரே திருவிழா, மைசூரில் மிகவும் பிரசித்தி பெற்றது. விவசாயிகள் உட்பட, லட்சக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு சென்று அங்கு தங்கி மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, வீடு திரும்புவர்.
மாடுகளின் திருவிழாவும் கூட, பிரசித்தி பெற்றதாகும். விவசாயிகள் தங்களின் மாடுகளுடன் இங்கு வந்து திருவிழாவில் பங்கேற்பது வழக்கம்
- நமது நிருபர் -.