ADDED : ஜன 02, 2025 11:35 PM

கோல்கட்டா: “வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்களை அனுமதித்து, மேற்கு வங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்,” என, மாநில முதல்வர் மம்தா குற்றஞ்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்குள், அண்டை நாடான வங்கதேசத்தவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இது குறித்து முதல்வர் மம்தா கூறியதாவது:
எல்லை பாதுகாப்பு மாநில அரசின் பொறுப்பல்ல. விசா வழங்குவது மத்திய அரசின் பணி. அதில் நாங்கள் தலையிட முடியாது.
அப்படி இருக்கையில், எல்லையில் வங்கதேசத்தினர் ஊடுருவுவதற்கு எங்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுகின்றன.
வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையினர் உதவுகின்றனர்.
இஸ்லாம்புர், சிதாய், சோப்ரா எல்லை வழியாக மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ, எல்லை பாதுகாப்பு படையினர் உதவுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேற்கு வங்கத்தை சீர்குலைக்கும் மத்திய அரசின் நோக்கத்திற்கு, இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதன் வாயிலாக மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஊடுருவல்காரர்கள் எந்த வழியாக மாநிலத்திற்குள் வருகின்றனர் என்பதை விசாரிக்கும்படி, டி.ஜி.பி., ராஜிவ் குமாருக்கு உத்தரவிட உள்ளேன். ஊடுருவல் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கின்றன. சில மாவட்ட எஸ்.பி.,க்கள், கலெக்டர்கள் அந்த தகவலை எங்களுடன் பகிர வில்லை. கடமையை சரியாக செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.