இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம் எப்பொழுது? வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் இதுதான்!
இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம் எப்பொழுது? வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் இதுதான்!
ADDED : அக் 18, 2025 04:52 PM

புதுடில்லி: 'இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சுமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முடிவு எட்டப்படும் போது தகவல் தெரிவிப்போம்' என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்கா வரி விதிப்பு குறித்து நிருபர்கள் கேள்விக்கு பியூஷ் கோயல் கூறியதாவது: பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடந்து வருகிறது என்று நான் நம்புகிறேன். மேலும் வர்த்தக ஒப்பந்தங்கள் அல்லது வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் காலக்கெடுவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.
இந்தியாவின் விவசாயிகள், இந்தியாவின் மீனவர்கள்,குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகிய நாட்டின் நலன்களை நாம் முழுமையாகக் ஆராயாமல் எந்த ஒப்பந்தமும் ஏற்படாது. பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன, நாங்கள் ஒரு முடிவை எட்டும்போது நிச்சயமாக உங்களுக்குத் தெரிவிப்போம். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அமெரிக்க தூதர் நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர், இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வாலை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவது ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.