மேற்குவங்கத்தில் செயல்படாத விரைவு நீதிமன்றங்கள்: மம்தா கடிதத்திற்கு மத்திய அரசு பதிலடி
மேற்குவங்கத்தில் செயல்படாத விரைவு நீதிமன்றங்கள்: மம்தா கடிதத்திற்கு மத்திய அரசு பதிலடி
UPDATED : ஆக 26, 2024 07:59 PM
ADDED : ஆக 26, 2024 07:40 PM

புதுடில்லி: மேற்குவங்கத்தில் 123 விரைவு கோர்டுகள் அமைத்தும் செயல்படாமல் உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.
இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , பிரதமர் மோடிக்கு கடந்த 22-ம் தேதி கடிதம் எழுதினார். அதில் புள்ளிவிவர அடிப்படையில் நாடு முழுதும் தினமும் 90 பலாத்கார வழக்குகள் பதியப்படுவது வேதனை அளிக்கிறது. இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது மத்திய சட்டத்தின் கீழ் விரைவாக விசாரணை நடத்தி, விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, வழக்கினை 15 நாட்களுக்கு முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இவரது கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
பாலியல் பலாத்கார வழக்குகள், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மத்திய அரசு 2019-ம் ஆண்டே விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளது.
கடந்த ஜூலை 01-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடுமையான தண்டனைகளை வழங்குவது வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக போக்சோ வழக்குகளை விசாரிக்க 20, பாலியல் பலாத்காரம் தொடர்பாக 103 என 123 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் பல இன்று வரை செயல்பாட்டில் இல்லை. இவ்வாறு அந்த பதில் கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.