லக்கி பாஸ்கர் திரைப்பட பாணியில் ரூ.7 கோடி மோசடி செய்தவர் கைது
லக்கி பாஸ்கர் திரைப்பட பாணியில் ரூ.7 கோடி மோசடி செய்தவர் கைது
ADDED : ஜன 29, 2025 08:25 PM

பெங்களூரு; 'லக்கி பாஸ்கர்' திரைப்பட பாணியில், 'ஸ்விக்கி' நிறுவனத்தின் 7 கோடி ரூபாயை மோசடி செய்த, தனியார் நிறுவன உதவி கணக்காளர் கைது செய்யப்பட்டார்.
நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில், கடந்த ஆண்டு லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் வங்கி கணக்காளராக வேலை செய்யும் துல்கர் சல்மான், வங்கி பணத்தை எடுத்து சொந்த தேவைக்கு பயன்படுத்துவார்.
சில நாட்கள் கழித்து, செலவு செய்த பணத்தை, வங்கியில் வைத்து விடுவார். இந்த திரைப்பட பாணியில் மோசடி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அதுபற்றிய விபரம் பின்வருமாறு:
பெங்களூரின் சாந்திநகரில், 'எர்ன்ஸ்ட் அன்ட் யங்' என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பல நிறுவனங்களுக்கு கணக்கியல் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் உதவி கணக்காளராக வேலை செய்த ஸ்ரீகாந்த், 35 என்பவருக்கு, 'ஸ்விக்கி' அலுவலகத்தின் மின்சார கட்டணத்தை தீர்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வரவு, செலவு குறித்து ஸ்விக்கி நிறுவனம் தணிக்கை செய்தது.
அப்போது மின்சார கட்டணம் செலுத்துவதற்காக, 'எர்ன்ஸ்ட் அன்ட் யங்' நிறுவனத்திற்கு வழங்கி இருந்த 7 கோடி ரூபாய், மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்று தெரிந்தது.
இதுகுறித்து நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த நிறுவனத்தினர் ஸ்ரீகாந்த் மீது அசோக்நகர் போலீசில் புகார் செய்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஸ்ரீகாந்தை தேடினர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்விக்கி நிறுவனம் மின்கட்டணம் செலுத்திய பணத்தை, ஸ்ரீகாந்த் சூதாட்டத்தில் முதலீடு செய்தது தெரிந்தது.
சூதாட்டத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து ஸ்விக்கி நிறுவனத்தின் மின் கட்டணத்தை செலுத்தி விடலாம் என்று திட்டமிட்டு இருந்ததும், ஆனால் அந்த திட்டம் கைகொடுக்கவில்லை என்பதும் ஸ்ரீகாந்திடம் நடத்திய விசாரணையில் தெரிந்தது.