ADDED : பிப் 12, 2025 07:02 AM

மைசூரு: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட நபரை, உதயகிரி போலீசார் கைது செய்தனர்.
ஆனால், அவர் விடுவிக்கப்பட்டதாக செய்தி பரவியதால், உதயகிரி போலீஸ் நிலையம் முன் திரண்டு போராட்டம் நடத்தியவர்கள் திடீரென கற்களை வீசியதால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மைசூரு, கல்யாணகிரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 35. இவர், ராகுல், அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் ஆகியோரை குறிப்பிட்ட மத குருவுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர், கோபமடைந்தனர்.
அதிகரித்த கூட்டம்
இதையடுத்து, சதீஷை நேற்று முன்தினம் இரவு உதயகிரி போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அதே வேளையில், அந்தநபர் கைது செய்யப்பட்ட தகவலும், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு தெரியவந்தது.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார் என்றும் தவறான தகவல் பரவியது. இதனால், ஆவேசமான அந்த சமூகத்தினர் உதயகிரி போலீஸ் நிலையம் முன் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகி கொண்டே சென்றது.
அவர்களை போலீசார் சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து சிலர், போலீசார் மீது கற்களை வீசினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதி முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. கல் வீச்சில் சில போலீசார் காயம் அடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.
ஏ.டி.ஜி.பி., ஆய்வு
சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜிதேந்திரா, நேற்று மைசூரு வந்தார். சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விபரம் கேட்டறிந்தார். கலவரத்தில் காயம்அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஏ.சி.பி., இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
தொடர்ச்சி 4ம் பக்கம்
ராகுல் குறித்து...
முதல் பக்கத் தொடர்ச்சி
நடத்திய ஏ.டி.ஜி.பி., ஜிதேந்திரா, 'சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் எதற்காக உதயகிரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு கூட்டம் கூட எதற்காக அனுமதித்தீர்கள். தகவல் கிடைத்தவுடன், தடுப்புகள் அமைக்காதது ஏன்' என்று கேள்வி எழுப்பினார்.
பின், ஜிதேந்திரா அளித்த பேட்டி:
கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார் என்று யாரோ தவறான செய்தியை பரப்பி உள்ளனர். தவறான செய்தி பரப்பியவர்களை பிடிக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கலவரத்தின் பின்னணியில் யார் உள்ளனர்; ஏதேனும் அமைப்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பதற்றம் நிலவிய உதயகிரி, என்.ஆர்.மொஹல்லா, லஷ்கர் மொஹல்லா, மண்டி மொஹல்லா ஆகிய பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில், முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா உட்பட பா.ஜ.,வினர் நேற்று உதயகிரி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி, அவர்களிடம் விளக்கினார்.
பின், அசோக் அளித்த பேட்டி:
இதேபோன்று, ஹூப்பள்ளி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு முதல்வர் சித்தராமையா, 'கிளீன் சிட்' கொடுத்ததால், இன்று இச்சம்பவம் நடந்துள்ளது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், அலட்சியமாக செயல்படுகிறார். போலீசார் சுதந்திரமாக முடிவெடுக்க அரசு அனுமதிக்க வேண்டும். அரசோ, இதற்கு நேர் எதிராக செயல்பட்டு வருகிறது.
திட்டமிட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாக்ஸ்...
* பா.ஜ., மனு
பெங்களூரில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
உதயகிரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. போராட்டத்தை ஏற்படுத்தி, கற்களை வீசியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவ இடத்தில் ஏ.டி.ஜி.பி., முகாமிட்டுள்ளார். டி.நரசிபுராவில் நடக்கும் கும்பமேளா பாதுகாப்பையும் அவர் ஆய்வு செய்வார்.
ஒரு சமூகத்தை திருப்திபடுத்தும் மாநில காங்கிரஸ் அரசின் கொள்கையால் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன என்று பா.ஜ.,வினர் கூறுவது சரியல்ல. அனைத்து விஷயத்தையும் பா.ஜ., அரசியலாக்குவது சரியல்ல.
மைசூருக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக் வந்தாலும் சரி, ஆலோசனை வழங்கினாலும் சரி, நாங்கள் அதை பின்பற்றுவோம். சட்டத்தை கையில் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்தில் போலீசார் மீது குறை இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உதயகிரி சம்பவம் தொடர்பாக மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கரை, முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தலைமையில் பா.ஜ.,வினர் சந்தித்து மனு கொடுத்தனர்.
பின், பிரதாப் சிம்ஹா கூறுகையில், ''சில குழுக்களால் போலீசார் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பிரச்னை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதில், சித்தராமையா அரசு தோல்வி அடைந்து விட்டது. முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர்களும் இதுபோன்று கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
***

