மத்திய அரசை பாராட்ட திமுகவுக்கு மனமில்லை: சொல்கிறார் இபிஎஸ்
மத்திய அரசை பாராட்ட திமுகவுக்கு மனமில்லை: சொல்கிறார் இபிஎஸ்
UPDATED : டிச 22, 2025 02:08 PM
ADDED : டிச 22, 2025 12:11 PM

சேலம்: ''100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. பாராட்ட மனமில்லை'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிருபர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அளித்த பேட்டி: தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணிக்கு நயினார் நாகேந்திரன் அழைத்தது பாஜவின் கருத்து. திமுகவிற்கு எதிரான ஒருமித்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரலாம். அதிமுக ஆட்சியில் இருந்த போது ரூ.5 ஆயிரம் கொடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
மனமில்லை
100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கை. இதுவரைக்கு நிறைவேற்றி இருக்கிறார்களா? இன்றைய தினம் மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. பாராட்ட மனமில்லை. அது பெயர் மாற்றம் குறித்து நாங்கள் கோரிக்கை வைத்து இருக்கிறோம். பழைய பெயர் தொடர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். பார்லிமென்டில் வாதாட வேண்டியதை, பார்லிமென்டில் வாதாட வேண்டும்.
அதிக கடன்
மாநில அரசுக்கு நிதி பிரச்னை இருப்பதாக கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள் பார்லிமென்டில் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியாவில் அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் தான். இது திமுக அரசின் பெரிய சாதனை. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழகஅரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
நிருபர்கள் கேள்வியும், இபிஎஸ் பதிலும்!
கேள்வி: ரயில் கட்டணம் உயர்ந்திருக்கிறதே?
இபிஎஸ் பதில்: ரயில் கட்டணம் உயரும் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்றைக்கு விலைவாசி உயர்வு, எரிபொருள் உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை கணக்கிட்டுதான் அவ்வப்போது உயர்த்துவார்கள். ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தி இருப்பதாக சொல்கிறார்கள். இதைக்கூட மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ரயில் கட்டணத்தைக் குறைப்பதற்கு உண்டான நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி: தவெகவினர் அவர்களை தூய சக்தி என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதற்கு தார்மீக உரிமை இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
இபிஎஸ் பதில்: அடுத்த கட்சியைப்பற்றி நாங்கள் என்ன சொல்வது. அவர்களின் கருத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதோடு சரி. அது தூய்மையா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஏற்கெனவே எங்கள் கழக துணைப்பொதுச்செயலாளர் அதற்கு அழகாக விளக்கம் அளித்திருக்கிறார். பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. உங்களுக்குப் புரிந்திருக்கும்.
கேள்வி: செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை கிளாம்பாக்கத்தில் விடுவது, மீண்டும் மண்டபத்தில் அடைப்பது என்று அரசு தொடர்ந்து செய்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இபிஎஸ் பதில்: இவர்களின் தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னார்கள். அரசு சார்பில் ஐந்தரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்கள். இதுவரை நிரப்பி இருக்கிறார்களா?
கேள்வி: எஸ்.ஐ.ஆர். மூலம் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்களே?
இபிஎஸ் பதில்: உண்மையான வாக்காளர் விடுபட்டிருந்தால் அதற்கு 1 மாத காலம் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படவில்லை. திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு இதை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். இதில் என்ன குறை இருக்கிறது?
இது எல்லா கட்சிக்கும் பொதுவானது. உண்மைக்கு மாறாக இருக்கும் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். உண்மையான வாக்காளர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் இதை வரவேற்கிறோம்.

