சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம்: விஜய்
சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம்: விஜய்
UPDATED : டிச 22, 2025 02:08 PM
ADDED : டிச 22, 2025 12:56 PM

சென்னை: சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம் என இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நடிகர் விஜய் பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேசியதாவது: இது ஒரு அன்பான தருணம், அழகான தருணம். அன்பும், கருணையும் தானே எல்லாத்துக்கும் அடிப்படை. இது இரண்டும் இருக்கிற மனது தானே தாய் மனசு. நமது தமிழக மண்ணும் அப்படிப்பட்ட ஒரு மண் தானே, தாய் அன்பு கொண்ட மண் தானே. ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தானே? பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லாம் பண்டிகையும், எல்லோரும் சந்தோஷமாக, ஷேர் பண்ணிக்க கூடிய ஊர் தானே நம்ம ஊர்.
நல்லிணக்கம்
இங்க வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறு, வேறு என்றாலும் நாம எல்லோரும் சகோதரர்கள் தானே? அதனால் தான் நாம் அரசியலுக்கு வந்த பிறகு, கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லி தர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை இருந்தால் மட்டுமே போதும், எந்த பிரச்னைகளையும் ஜெயிக்கும். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையின் வலிமையை பற்றி சொல்வதற்கு பைபிளில் நிறைய கதைகள் இருக்கிறது.
சகோதரர்களே!
அதை படிக்காதவர்கள் படித்து பாருங்கள். குறிப்பாக ஒன்று பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இளைஞருக்கு எதிராக, தன்னுடைய சொந்த சகோதரர்களே பொறாமைபட்டு, அவனை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டனர், அதன் பிறகு அவர் எப்படி மீண்டு வந்து அந்த நாட்டிற்கே அரசன் ஆகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமல்ல, அந்த நாட்டையே எப்படி காப்பாற்றினார் என்ற கதை பைபிளில் இருக்கிறது. படிக்காதவர்கள் படித்து பாருங்கள்
எதிரிகளை…!
அந்த குறிப்பிட்ட கதை யாரை பற்றிய கதை என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் நமக்கு எதை உணர்த்துகிறது என்றால், கடவுளின் அருளும், மக்களை நேசிக்கிற அன்பும், அதிக வலிமையும், அதற்கான உழைப்பும் இருந்தால் மட்டுமே போதும், எவ்வளவு பெரிய ஒரு போராட்டமோ, போரோ, எதிரிகளையோ ஜெயிக்கலாம். இதை தான் இந்த கதைகள் நமக்கு உணர்த்துகிறது. இந்த விழாவில் ஒரு உறுதியை நான் கொடுக்கிறேன்.
வெற்றி நிச்சயம்
நாமும், தமிழக வெற்றிக்கழகமும் சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதில் எந்த விதமான சமரசமும் இருக்கவே இருக்காது. அதனால் தான் நமது கொள்கைகளுக்கு மதசார்பற்ற கொள்கை என்று பெயர் வைத்தோம். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அந்த ஒளி நம்மை வழிநடத்தும். நம்பிக்கையுடன் இருங்கள்; வெற்றி நிச்சயம். இங்கு வந்து இருக்கும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அனைத்து புகழும் எல்லா வல்ல இறைவனுக்கே. இவ்வாறு விஜய் பேசினார்.

