ADDED : ஜூன் 24, 2025 07:54 PM
புதுடில்லி:சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பு கொண்டு, அப்பாவி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறி, பணம் பெற்று ஏமாற்றிய போலி வேலைவாய்ப்பு வழங்கும் மோசடி நிறுவனத்தை, டில்லி போலீசார் மூடி சீல் வைத்துள்ளனர். இதுதொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிறரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராகுல், 30, என்பவர், பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை தருவதாக கூறி, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்திருந்தார். அதை உண்மை என நம்பிய 19 வயது இளைஞர், வேலை கேட்டு விண்ணப்பித்தார். அவரை தொடர்பு கொண்ட ராகுல், பல கட்டணங்களாக, 9,000 ரூபாய் வாங்கிக் கொண்டார். ஆனால், வேலை தரவில்லை.
ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:
'ஜாப் ஹய்' என்ற பெயரில், வேலை வழங்கும் நிறுவனத்தை நடத்திய ராகுலும், அவர் மனைவி சீமாவும், பல இளைஞர்களிடம் பணம் பெற்று மோசடி செய்து வந்துள்ளனர்.
கடந்த 2011 முதல், பல பெயர்களில், பல முன்னணி நிறுவனங்களின் பெயர்களை சொல்லி ஏமாற்றி, பணம் பறித்து வந்துள்ளனர். இதற்காக, நிர்மாண் விஹார் என்ற இடத்தில் வாடகைக்கு அலுவலகம் ஒன்றை நடத்தி, அதில் இருந்தவாறு மோசடி செய்து வந்துள்ளனர்.
இப்போது புகார் கூறியுள்ள, 19 வயது இளைஞர் விண்ணப்பித்ததும், அவரை தொடர்பு கொண்ட, கமல் என்ற நபர், தன்னை அந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர்., என கூறினார். அதை நம்பிய அந்த இளைஞரை அவர்கள் கூட்டாக ஏமாற்றியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக, ராகுல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மனைவி சீமா தலைமறைவாகி விட்டார். அவர் உட்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
கைதான ராகுலின் அலுவலகத்தில் இருந்து பல போலி நிறுவனங்களின் லெட்டர் பேடுகள், கடிதங்கள், ரப்பர் ஸ்டாம்புகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.