திருட்டு தொழில் பாவத்தை போக்க பரிகாரம்; கோவிலுக்கு நன்கொடை வழங்கியவர் கைது
திருட்டு தொழில் பாவத்தை போக்க பரிகாரம்; கோவிலுக்கு நன்கொடை வழங்கியவர் கைது
ADDED : ஏப் 30, 2025 12:44 AM

கலபுரகி: திருடுவதால் ஏற்படும் பாவத்தைப் போக்க, திருடிய பணத்தில், ஏழைகளின் மருத்துவ செலவு, கோவில்களுக்கு நன்கொடை, அன்னதானம் என செலவழித்த திருடனை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டம், பாக்யவந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர் கவுடா. கடந்த 13ம் தேதி குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார். மாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, 343 கிராம் தங்க நகைகள், 14.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 10,000 ரூபாய் மதிப்புள்ள 40 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக, நகர போலீஸ் கமிஷனர் ஷரணப்பா நேற்று அளித்த பேட்டி:
சங்கர் கவுடா கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சிவபிரசாத் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது திருடியதை ஒப்புக் கொண்டார். இவர், பெரிய பெரிய வீடுகளில் மட்டுமே திருடி உள்ளார்.
இதன் வாயிலாக கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை, தன் பாவத்தை போக்கும் விதமாக, ஏழைகள், நோயாளிகள், கோவில்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம், லட்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். 260 வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவர், தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 412 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
திருட செல்வதற்கு முன், தன் கை விரல்களில், 'பெவிகிவிக்' அல்லது, 'பெவிகால்' பூசிக்கொள்வார். இதன் வாயிலாக திருடச் செல்லும் இடங்களில் தன் கைரேகை பதிவாகாமல் கவனமுடன் இருந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

