பாதி விலையில் ஸ்கூட்டர், லேப்டாப் ஆசைகாட்டி கோடிகளை சுருட்டியவர் கைது
பாதி விலையில் ஸ்கூட்டர், லேப்டாப் ஆசைகாட்டி கோடிகளை சுருட்டியவர் கைது
ADDED : பிப் 06, 2025 12:27 AM
கொச்சி: கேரளாவில், பாதி விலைக்கு ஸ்கூட்டர், லேப்டாப் போன்ற பொருட்களை தருவதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மூவாட்டுப்புழா போலீசார் கூறியதாவது:
கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன், 26. மூவாட்டுப்புழாவில்சமூக பொருளாதார மேம்பாடு என்ற அமைப்பை துவங்கி உறுப்பினர்களை சேர்த்தார்.
அவர்களிடம், பாதி விலைக்கு ஸ்கூட்டர், லேப்டாப், தையல் மெஷின், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதாக கூறி, பணம் வசூலித்துள்ளார்.
தேசிய தன்னார்வ தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என, பொதுமக்களை நம்ப வைத்ததோடு, கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., எனப்படும், பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி வாயிலாக இந்த பொருட்களை பாதி விலையில் பெற்றுத் தருவதாக கூறி, 2022ல் இருந்து மோசடி செய்து வந்திருக்கிறார்.
கேரள மாநிலம் முழுதும் தன் அமைப்புக்கு, 62 கிளைகளை துவக்கியுள்ள அனந்து கிருஷ்ணன், மூவாட்டுப்புழாவில் மட்டும் 9 கோடி ரூபாய் சுருட்டியுள்ளார். இடுக்கி மற்றும் மூவாட்டுப்புழா மாவட்டங்களில் மொத்தம் 20 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்.
கேரளா முழுதும் இருந்து தொடர்ந்து புகார்கள் வருவதால், அனந்து கிருஷ்ணன் மோசடி செய்த பணத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும் என தெரிகிறது. இந்த மோசடியில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.