வலைதளம் மூலம் பெண்களிடம் ரூ.62 லட்சம் பறித்தவர் கைது
வலைதளம் மூலம் பெண்களிடம் ரூ.62 லட்சம் பறித்தவர் கைது
ADDED : நவ 15, 2024 11:51 PM

தாவணகெரே: கர்நாடகாவில், திருமண வலைதளம் வாயிலாக வலை விரித்து, இளம் பெண்களிடம் 62 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், தாவணகெரேவை சேர்ந்த 23 வயது இளம்பெண் திருமண இணையதளம் வாயிலாக வரன் தேடினார்.
அவருக்கு ஒரு இணையதளம் வாயிலாக இளைஞர் ஒருவர் அறிமுகமானார்.
இளம்பெண்ணை பிடித்திருப்பதாகக் கூறினார். திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்தார். மைசூரு ரயில்வே ஒர்க்ஷாப்பில் வேலை வாங்கி தருவதாக கூறிய அவர், அப்பெண்ணிடம் 21 லட்சம் ரூபாயை, தன் வங்கிக்கணக்கில் செலுத்த வைத்தார்.
அதன்பின் இளம்பெண் அழைப்பை அவர் ஏற்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், தாவணகெரே நகர சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, மாண்டியாவைச் சேர்ந்த மது, 31, என்ற இளைஞரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மது, திருமண வலைதளம் வழியாக, படித்த இளம்பெண்களிடம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளிப்பார்.
சில நாட்கள் கடந்த பின், 'உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன். அதன்பின் திருமணம் செய்து கொள்ளலாம்' என, ஆசை காட்டுவார்.
அரசு வேலைக்கு பணம் கொடுக்க வேண்டுமென நம்ப வைத்து, லட்சக்கணக்கான ரூபாய் பெற்று ஏமாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதுவரை மது, சிக்கமகளூரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் 3.30 லட்சம் ரூபாய், மாண்டியாவில் ஒரு பெண்ணிடம் 26 லட்சம் ரூபாய், பெங்களூரு பெண்ணிடம் 2.8 லட்சம் ரூபாய் என, பல்வேறு இடங்களில் 62 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.