கள்ளக்காதலி வாயில் ஜெலட்டின் குச்சிகளை திணித்து வெடிக்க வைத்து கொன்றவர் கைது
கள்ளக்காதலி வாயில் ஜெலட்டின் குச்சிகளை திணித்து வெடிக்க வைத்து கொன்றவர் கைது
ADDED : ஆக 26, 2025 03:15 AM

மைசூரு: கள்ளக்காதலியின் வாயில், 'ஜெலட்டின்' வெடிமருந்து குச்சிகளை அடைத்து, வெடிக்க வைத்து கொடூரமாக கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், கெரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரக்ஷிதா, 20. இவருக்கு, பிரியபட்டணாவின் பிளிகெரே கிராமத்தில் வசிக்கும் சித்தராஜு, 26, என்பவருடன் காதல் இருந்தது. இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியூர் சென்று வந்துள்ளனர்.
பிரச்னை இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், ரக்ஷிதாவை கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து கொடுத்தனர். திருமணத்துக்கு பின்னரும், சித்தராஜுவுடனான கள்ளத்தொடர்பை, ரக்ஷிதா விடவில்லை. அவ்வப்போது இருவரும் சந்தித்து வந்தனர்.
'மைசூரின் கபடியில் உள்ள சித்தப்பாஜி கோவிலுக்கு செல்லலாம்' என கூறி, ரக்ஷிதாவை சித்தராஜு மைசூருக்கு வரவழைத்தார்.
நேற்று முன்தினம் இருவரும், சாலிகிராமம் தாலுகாவின், பேர்யா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். இரவில் இவர்களுக்குள் என்ன பிரச்னை ஏற்பட்டது என, தெரியவில்லை.
நள்ளிரவில் ரக்ஷிதாவின் வாயில் ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகளை திணித்து, வெடிக்க வைத்து சித்தராஜு கொடூரமாக கொலை செய்தார். வெடி சத்தம் கேட்டு லாட்ஜ் ஊழியர்கள், அக்கம், பக்கத்து அறைகளில் தங்கியிருந்தோர் வந்து பார்த்த போது, 'மொபைல் போன்' வெடித்து, காதலி இறந்ததாக நாடகமாடினார்.
கைது
ஆனால், அங்கு மொபைல் போன் பாகங்கள் எதுவும் இல்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள், 'மொபைல் போன் எங்கே' என கேட்ட போது, வெளியே வீசி எறிந்ததாக பொய் சொல்லிவிட்டு, சித்தராஜு தப்பிக்க முயற்சித்தார்.
அவரை மடக்கி பிடித்த லாட்ஜ் ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சாலிகிராமம் போலீசார், விசாரணை நடத்திய போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், எதற்காக கொலை செய்தார், ஜெலட்டின் குச்சிகளை எங்கிருந்து வாங்கி வந்தார் என்று விசாரிக்கின்றனர்.

