மூன்று மாநில வங்கிகளில் கொள்ளை பழ வியாபாரியாக நடித்தவர் கைது
மூன்று மாநில வங்கிகளில் கொள்ளை பழ வியாபாரியாக நடித்தவர் கைது
ADDED : நவ 08, 2025 12:39 AM

புதுடில்லி: பழ வியாபாரி போல நடித்து, வங்கிகளைக் குறிவைத்து கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.
டில்லி மாநகரப் போலீசின் குற்றப்பிரிவு துணைக் கமிஷனர் ஹர்ஷ் இந்தோரா கூறியதாவது:
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கம்ருல் என்ற மாமு. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த பல வங்கிக் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டார்.
தென்மேற்கு டில்லி மஹாவீர் என்கிளேவில் பழ வியாபாரம் செய்தார். தள்ளு வண்டியில் பழம் விற்பது போல, வங்கியின் அருகே நின்று அதன் செயல்பாடுகளை முழுதுமாக கண்காணிப்பார்.
வங்கிக்குள் எப்படி நுழைவது, வெளியேறுவது எப்படி, அலாரத்தை முடக்க என்ன செய்ய வேண்டும் என அனைத்து தகவல்களையும் திரட்டுவார்.
ஊழியர்களின் நடவடிக்கைகள், பாதுகாப்பு என முழுமையாக கண்காணித்து திட்டமிடுவார். அதன்பின், தன் கூட்டாளிகளுடன் இணைந்து திட்டமிடப்பட்ட வங்கியில் அலாரம் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களை முடக்கி கைவரிசையைக் காட்டுவார்.
ஒரு வங்கியில் கொள்ளையடித்தவுடன் அனைவரும் பிரிந்து வெவ்வேறு நகரங்களுக்குச் சென்று விடுவர். போலீசின் நடவடிக்கையை கண்காணித்து, சில மாதங்கள் கழித்து மீண்டும் அடுத்த திட்டத்தை துவக்குவார்.
கர்நாடக மாநிலத்தில் மூன்று பெரிய வங்கிகளில் கொள்ளையடித்த வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக கம்ருல் அறிவிக்கப்பட்டு இருந்தார்.
மேலும், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்தக் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.
தென்மேற்கு டில்லி உத்தம் நகர் மஹாவீர் என்கிளேவில் கம்ருல் பதுங்கி இருக்கும் தகவல், 5ம் தேதி கிடைத்தது.
தனிப்படை போலீசார் அங்கு தீவிரமாக கண்காணித்து, கம்ருல் என்ற மாமுவை கைது செய்தனர். கொள்ளை மட்டுமின்றி கொலை, கொலை முயற்சி, திருட்டு, ஏமாற்றுதல் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை ஆகிய வழக்குகளும் கம்ருல் மீது நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
படிப்பறிவு இல்லாத கம்ருல், வங்கிகளில் கொள்ளையடிக்க மிகத்திறமையாக திட்டமிட்டுள்ளார்.
பெரும்பாலும் உள்ளூரிலேயே கூட்டாளிகளை உருவாக்கி, அந்தந்த மாநில மொழியையே பயன்படுத்தியுள்ளார்.
அவரது கூட்டாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடுகின்றனர். கம்ருலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

