ADDED : நவ 08, 2025 12:40 AM

புதுடில்லி: பறவைக் காய்ச்சல் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டில்லி தேசிய உயிரியல் பூங்கா, இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
டில்லி தேசிய உயிரியல் பூங்காவில் நீர்ப்பறவைக் கூடத்தில் ஆகஸ்ட் மாதம் பறவைக் காய்ச்சல் பரவியது. பல பறவைகள் திடீர் திடீரென இறந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக. 30ம் தேதி உயிரியல் பூங்கா மூடப்பட்டது.
பூங்கா முழுதும் நோய்க்கிருமி தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து வாரந்தோறும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பூங்கா முழுதும் சுத்தம் செய்யப்பட்டது.
செப்டம்பர் மாதத்தில் இருந்தே நோய் பரவல் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டாலும், கடந்த மாதம், சேகரிக்கப்பட மாதிரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு நோய்கள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு நடத்திய சோதனையில் நோய் பரவல் தொற்று எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பூங்கா முழுதும் மீண்டும் சுத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், பார்வையாளர்களுக்காக பூங்காவை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பரிசீலனை செய்த அரசு, அனுமதி அளித்தது.
டில்லி தேசிய உயிரியல் பூங்கா, இரண்டு மாதங்களுக்குப் பின் பார்வையாளர்களுக்காக இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இனி, வழக்கம் போல செயல்படும் என பூங்கா அதிகாரிகள் கூறினர்.
ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை 12 பறவைகள் உயிரிழந்தன. அந்தப் பறவைகளை ஆய்வு செய்த போது, பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளிலும் பறவைக் காய்ச்சல் பரவியதால், டில்லி உயிரியல் பூங்கா இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தது.
தலைநகர் டில்லியின் மையப்பகுதியில் 176 ஏக்கரில் அமைந்துள்ள டில்லி தேசிய உயிரியல் பூங்கா, 1959ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு, 96 வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.

