ரூ.21 கோடி போதை மாத்திரை; உடலில் மறைத்து கடத்தியவர் கைது!
ரூ.21 கோடி போதை மாத்திரை; உடலில் மறைத்து கடத்தியவர் கைது!
ADDED : டிச 23, 2024 09:44 PM

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் 21 கோடி ரூபாய் மதிப்பிலான 1.383 கிலோ போதை கேப்சூல்களை கடத்தி வந்த நபர், சுங்கத்துறையினரிடம் பிடிபட்டார்.
டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த டிச.11ம் தேதி அன்று, பிரேசில் நாட்டை சேர்ந்த லுாகாஸ் ஹெ ன்ரிக் டி ஒலிவோரா பிரிட்டோ, 28, என்ற பயணி விமானத்தில் வந்திறங்கினார். அவரது நடை, பாவனைகளில் வித்தியாசம் கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.
அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் போதை மருந்து கடத்தி வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். தான், போதை கேப்சூல்களை உட்கொண்டு விட்டதாகவும், வயிற்றுக்குள் கேப்சூல் இருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். டாக்டர்கள் உதவியுடன் அவரது வயிற்றில் இருந்த 1.383 கிலோ எடை கொண்ட கோகைன் போதை மருந்து கைப்பற்றப்பட்டது. அவரது வயிற்றில் இருந்த 127 காப்சூல்களின் சர்வதேச மதிப்பு 21 கோடி ரூபாய். இதையடுத்து ஒலிவோரா பிரிட்டோ கைது செய்யப்பட்டார்.
அவர், யாருக்காக இந்த போதை மருந்தை கடத்தி வந்தார், சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் யார் என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

