ADDED : ஜன 20, 2025 06:54 AM
பனசங்கரி: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியையும், தடுக்க முயன்ற மாமியாரையும் வாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பனசங்கரி அம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள பகுதியில் வசிப்பவர் ஆசிப், 28. இவரது மனைவி ஹீனா கவுசர், 25. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர்.
ஹீனா, தன்னுடன் கல்லுாரியில் படித்த ஆண் நண்பர்கள் சிலரிடம், மொபைல் போனில் அடிக்கடி பேசி உள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை, கணவர் தாக்கினார்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த மனைவி, பிள்ளைகளுடன் தாய் பர்வீன் வீட்டில் வந்து வசித்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு மாமியார் வீட்டிற்கு சென்ற ஆசிப், மனைவி ஹீனாவை வாளால் வெட்டினார். தடுக்க முயன்ற பர்வீனுக்கும் வெட்டு விழுந்தது.
பனசங்கரி போலீசார் விசாரித்தனர். தலைமறைவாக இருந்த ஆசிப் நேற்று கைது செய்யப்பட்டார்.