மூதாட்டியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்
மூதாட்டியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்
ADDED : ஆக 11, 2025 02:20 AM
புதுடில்லி:மூதாட்டியிடம், 14 லட் சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
தென்மேற்கு டில்லி துவாரகா, 'ராயல் ரெஸிடென்ஸி' அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மஞ்சுஷா ராணி குப்தா. வயது முதிர்வு காரணமாக, மஞ்சுஷா தன் பாதுகாவலராக ராஜஸ்தான் மாநிலம் சோக்டி கிராமத்தைச் சேர்ந்த தீபக் குமார் சைனி, 31, என்ற வாலிபரை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நியமித்தார்.
மஞ்சுஷாவுக்கு வங்கி ஓ.டி.பி., எண் பார்த்துச் சொல்லுதல் மற்றும் வங்கிக்கு சென்று வருதல் உள்ளிட்ட பணிகளையும் தீபக் குமார் செய்து வந்தார்.
இந்நிலையில், ஜனவரி 30ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை, மஞ்சுஷாவின், 'பே டிஎம்' செயலியை பயன்படுத்தி, 14.35 லட்சம் ரூபாயை தன் வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டார்.
இதற்கிடையில், தீபக்கின் நடவடிக்கை காரணமாக அவரை வேலையில் இருந்து மஞ்சுஷா நீக்கி வி ட்டார். இந்நிலையில், தன் வங்கிக் கணக்கில் பணம் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்த அவர், போலீசில் புகார் செய்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜஸ்தானின் சிகார் கிராமத்தில் பதுங்கி இருந்த தீபக் குமார் சைனியை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான தீபக் குமார், அதில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்துள்ளார். அதை ஈடு செய்ய மஞ்சுஷா கணக்கில் இருந்து திருடியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருடிய பணத்தில் பெரும்பகுதியை சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், மீதி பணத்தை கிளப் மற்றும் ஹோட்டல்களில் செலவு செய்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணை நடக்கிறது.