மகள், மாமியார், மைத்துனியை சுட்டு கொன்றவர் தற்கொலை
மகள், மாமியார், மைத்துனியை சுட்டு கொன்றவர் தற்கொலை
ADDED : ஏப் 03, 2025 05:23 AM

சிக்கமகளூரு: மனைவி பிரிந்து சென்றதால் வெறுப்படைந்த கணவர், தன் மகள், மாமியார், மைத்துனியை சுட்டு கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், கொப்பாவைச் சேர்ந்தவர் ரத்னாகர், 37; தனியார் பள்ளி வேன் ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி சுவாதி என்ற மனைவியும், மவுல்யா, 7, என்ற மகளும் இருந்தனர்.
குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்குள் அடிக்கடி சண்டை நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கணவர், மகளை விட்டு பிரிந்த சுவாதி, பெங்களூரில் தனியாக வசித்து வருகிறார்.
மகளை வளர்க்கும் பொறுப்பு, ரத்னாகரிடம் வந்தது. தான் பணியாற்றும் பள்ளியிலேயே, மகளை சேர்த்திருந்தார். மகள், தினமும் தன் தாயை கேட்டு அடம் பிடித்தார்.
பள்ளியிலும் சக மாணவியர், மவுல்யாவிடம், 'உன் தாய் எங்கே' என கேட்டுள்ளனர். இதை அவர் தந்தையிடம் கூறி வருந்தினார். இதனால், ரத்னாகர் கடும் மன உளைச்சலில் இருந்தார்.
இதற்கிடையே யுகாதி பண்டிகைக்காக, ரத்னாகரின் மாமியார் வீட்டினர், பேத்தி மவுல்யாவை தாங்கள் வசிக்கும் மாகலு கிராமத்துக்கு அழைத்து சென்றிருந்தனர்.
பண்டிகை கொண்டாட, அங்கு தன் மனைவியும் வந்திருக்கலாம் என நினைத்து ரத்னாகர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், நாட்டு துப்பாக்கியுடன் மாமியார் வீட்டுக்கு சென்றார்.
அங்கு மனைவி வரவில்லை. கோபமடைந்த ரத்னாகர், துப்பாக்கியால் மகள் மவுல்யா, 7, மாமியார் ஜோதி, 50, மைத்துனி சிந்து, 24, ஆகிய மூவரையும் சுட்டு கொன்றார். துப்பாக்கி சூட்டில் சிந்துவின் கணவர் அவினாஷின் காலில் குண்டு பாய்ந்தது.
அதன்பின் ரத்னாகர், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன், அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில், 'என் மனைவி எனக்கு துரோகம் செய்து, இரண்டு ஆண்டுகளாகிறது. மகள் தினமும் தாயை கேட்கிறாள். பள்ளியிலும் உன் தாய் எங்கே என, அவளிடம் கேட்கின்றனர். என் மகளின் அன்பை விட, எனக்கு வேறு எதுவும் பெரிது இல்லை' என கூறியுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த அவினாஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்களை மீட்டு, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

