கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : மார் 01, 2025 08:11 AM

மும்பை; மும்பையில் ஐகோர்ட் நடவடிக்கைகளை தமது மொபைல்போனில் பதிவு செய்த நபருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மும்பை ஐகோர்ட்டில் சொத்து தகராறு தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ஏ.எஸ். கட்கரி, கமல்கட்டா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது, நவி மும்பையைச் சேர்ந்த சஜத் அப்துல் ஜப்பார் படேல் என்பவர், கோர்ட் நடவடிக்கைகளை உள்ளேயே இருந்து கொண்டு தமது மொபைல்போனில் படம் பிடித்துள்ளார். இதை கோர்ட் ஊழியர் ஒருவர் பார்த்துவிட யார் என்று விசாரித்துள்ளார். மனுதாரரின் உறவினர் என்று அவர் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து படம்பிடித்த நபர் பற்றி மனுதாரர் வக்கீலிடம் நீதிபதிகள் விசாரித்தனர். அதன்பின்னர், கோர்ட் நடவடிக்கைகளை மொபைல்போனில் ஒலிப்பதிவு செய்ய அவருக்கு அனுமதி தரப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, நடத்தை விதிகளை மீறியதாக சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.1 லட்சம் அபராதத்தை நீதிபதிகள் விதித்தனர். இந்த தொகையை கோர்ட் ஊழியர்கள் மருத்துவ நிதிக்காக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.