ADDED : ஜூலை 02, 2025 10:03 PM
பெரோஸ்பூர்:பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் காயம் அடைந்தவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல், 22ம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணியர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நம் ராணுவம் மே 7ம் தேதி, 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி கொடுத்து, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின், ஒன்பது முகாம்களை அழித்தது.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் நம் ராணுவத் தளங்கள் மீது மே 9ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு ஏவுகனை தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் கைபீமேகை கிராமத்தில், லக்விந்தர் சிங், 57, என்பவர் வீடு மீது ஏவுகனை விழுந்தது. லக்விர்ந்தர் சிங், அவரது மனைவி சுக்விந்தர் கவுர்,50, மகன் ஜஸ்விந்தர் சிங்,24 ஆகியோர் காயம் அடைந்து, லூதியானா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த லக்விந்தர் சிங், நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மனைவி சுக்விந்தர் கவுர் மே 13ம் தேதியே மரணம் அடைந்து விட்டார். மகன் ஜஸ்விந்தர் சிங் சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பினார்.