நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு: கார்கேவுக்கு மோகன் பகவத் பதிலடி
நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு: கார்கேவுக்கு மோகன் பகவத் பதிலடி
ADDED : நவ 09, 2025 01:53 PM

பெங்களூரு: நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியதை அடுத்து, மோகன் பகவத் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளைத் தடை செய்யக் கோரினார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பதிவு எண் மற்றும் அவர்களின் நிதி ஆதாரத்தைக் கூட அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், பதிவு செய்யப்படாமல் செயல்படுவதற்காக ஆர்எஸ்எஸ்ஸை விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பதிலடி கொடுத்து இருக்கிறார். அவர் பேசியதாவது: ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925ல் நிறுவப்பட்டது. எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு பதிவை கட்டாயமாக்கவில்லை. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம், மேலும் நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. வருமான வரித் துறையும் நீதிமன்றங்களும் ஆர்எஸ்எஸ்ஸை தனிநபர்களின் அமைப்பாகக் குறிப்பிட்டுள்ளன. மேலும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
நாங்கள் மூன்று முறை தடை செய்யப்பட்டோம். எனவே அரசாங்கம் எங்களை அங்கீகரித்துள்ளது. பதிவு செய்யப்படாதத்தற்கு பல விஷயங்கள் உள்ளன. ஹிந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸில் காவி கொடி ஒரு குருவாகக் கருதப்பட்டாலும், இந்திய மூவர்ண கொடி மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

