28 ஆண்டுகளுக்கு முன் 'இறந்தவர்' தேர்தல் கமிஷனால் வீடு திரும்பினார்
28 ஆண்டுகளுக்கு முன் 'இறந்தவர்' தேர்தல் கமிஷனால் வீடு திரும்பினார்
ADDED : ஜன 02, 2026 05:31 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில், 28 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கருதப்பட்ட நபர், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வாயிலாக, உயிரோடு இருப்பது தெரிய வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இதன் வாயிலாக, 28 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கருதப்பட்ட நபர், உயிரோடு வீடு திரும்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம், கடவுலி பகுதியைச் சேர்ந்தவர் அஹமது ஷெரீப், 79. இவர் முதல் மனைவி காலமானதைத் தொடர்ந்து, 1997ல் மறுமணம் செய்தார். தன் இரண்டாவது மனைவியுடன் மேற்கு வங்கம் சென்றார். உ.பி.,யில் இருந்த உறவினர்களுடன் அவ்வப்போது போனில் பேசி வந்த ஷெரீப்புடனான தொடர்புகள் படிப்படியாக துண்டிக்கப்பட்ட ன.
மேற்கு வங்கத்தில் அவர் தங்கியிருந்த முகவரியை, தொடர்புகொள்ள முடியாததால், ஷெரீப் இறந்துவிட்டதாக உறவினர்கள் கருதினர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர்., பணிகளின் போது, ஷெரீப்பின் பழைய ஆவணங்கள் கேட்கப்பட்டன. அது தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக, கடவுலிக்கு இவர் சென்றார். ஷெரீப்பின் திடீர் வருகை, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஷெரீப் கூறுகையில், ''என் இரண்டாவது திருமணம் நடந்த நேரத்தில் குறைந்த அளவிலேயே தகவல் தொடர்பு வசதிகள் இருந்ததால், குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ''எஸ்.ஐ-.ஆர்., பணிக்காக ஆவணங்கள் தேவைப்பட்டதால், சொந்த ஊர் வந்தேன். குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

