நிர்வாண வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டியவருக்கு கம்பி
நிர்வாண வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டியவருக்கு கம்பி
ADDED : செப் 16, 2025 12:29 AM

பாலக்காடு; பெண்ணிடம் நிர்வாண போட்டோக்களை காட்டி மிரட்டிய, பச்சை குத்தும் கலைஞரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த, 15 வயது பெண்ணின் பெற்றோர், பாலக்காடு டவுன் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதில், தங்கள் மகளின் நிர்வாண வீடியோக்களை, சமூக வலைதளத்தில் பரப்புவதாக வாலிபர் ஒருவர் மிரட்டுவதாக கூறியிருந்தனர்.
போலீஸ் விசாரணையில், கொல்லம் மாவட்டம், புன்னல பிறவந்துாரை சேர்ந்த பிபின், 22, மிரட்டியது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு, எர்ணாகுளம் மாவட்டத்தில் அவரை பிடித்த போலீசார், போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் விபின்குமார் கூறுகையில், ''சமூக வலைதளம் மூலம் புகார்தாரரின் பெண்ணுடன் பிபினுக்கு நட்பு ஏற்பட்டு, நிர்வாண போட்டோ, வீடியோக்களை பிபின் பெற்றுள்ளார். அதன்பின், தன்னுடனும், நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்புவதாக மிரட்டியுள்ளார். பிபின் பச்சை குத்தும் கலைஞர். இவர், இதேபோன்று ஏராளமான பெண்களை அச்சுறுத்தி பணிய வைத்துள்ளார்,'' என்றார்.