இயற்கையை நேசிப்பவர்களுக்கு பிடித்தமான 'மண்டல்பட்டி வியூ பாயின்ட்'
இயற்கையை நேசிப்பவர்களுக்கு பிடித்தமான 'மண்டல்பட்டி வியூ பாயின்ட்'
ADDED : அக் 23, 2024 08:54 PM

குடகு மாவட்டம், மடிகேரியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ளது, 'மண்டல்பட்டி வியூ பாயின்ட்'. இயற்கையை நேசிப்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். மண்டல்பட்டி என்ற பெயர் மேகங்களுக்கு இடையே உள்ள தலை அல்லது அதன் உயரம் காரணமாக மேகங்களை தொடும் தலை என்று கூறப்படுகிறது.
நகர வாழ்க்கையின் சலசலப்புகளில் இருந்து விலகி, தனிமை, அமைதியை அளிப்பதால், சுற்றுலா பயணியர் இடையே சமீபகாலமாக இப்பகுதி பிரபலமடைந்து வருகிறது.
இங்கிருந்து பார்க்கும் போது, நகரம், அதை சுற்றி உள்ள சமவெளிகளின் பரந்த காட்சியை காணலாம். சூரிய அஸ்தமனத்தின் போது சூரிய கதிர்களின் வண்ணங்கள், வானத்தில் மழை பொழிவு போல காணும் காட்சி அற்புதமாக இருக்கும். மலை பகுதியில் குறிப்பிட்ட இடம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கிருந்து 200 மீட்டர் உயரம் உள்ள மண்டல்பட்டி வியூபாயின்டுக்கு செல்ல, 3 கி.மீ., நடக்க வேண்டும்.
மலையேற்றம் என்பது சவாலானதாகும். ஏனெனில், இப்பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீண்டும் அடிவாரத்துக்கு சென்றுவிடலாம் என்று நினைக்க தோன்றும்.
இங்கு கடைகள் எதுவும் இல்லை. மலையேற்றம் செய்வதற்கு முன், தேவையான அனைத்து பொருட்கள், உணவு, தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
சுற்றுலா பயணியரை ஊக்குவிக்க, வனத்துறை சார்பில் ஜீப்பில் நான்கு பேர் செல்லக்கூடிய அளவில் வாகன வசதியும் செய்துள்ளது. ஜீப்பில் கரடு முரடான பாதையில் செல்வது திகிலுாட்டும் அனுபவத்தை அளிக்கும். ஒரு ஜீப்பில் பயணிக்க 1,700 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.
� இயற்கையின் அழகை காணும் வகையில் உள்ள மண்டல்பட்டி வியூ பாயின்ட். � சுற்றுலா பயணியரை அழைத்து செல்ல காத்திருந்த ஜீப்கள்.
- நமது நிருபர் -