ADDED : டிச 09, 2024 06:55 AM

மாண்டியா: காங்கிரஸ் மாநாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாண்டியாவில் நடத்தப்படவிருந்த ம.ஜ.த., மாநாடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் சித்தராமையாவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஹாசனில் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ம.ஜ.த., சார்பில் மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு பாராட்டு விழா என்ற பெயரில், மாண்டியாவில் வரும் 15ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நடத்தப்படவில்லை.
மத்துாரில் முன்னாள் அமைச்சர் புட்டராஜு கூறியதாவது:
அகில இந்திய கன்னட இலக்கிய மாநாடு நடக்க உள்ளதால், குமாரசாமியின் பாராட்டு விழா ஒத்தி வைக்கப்படுகிறது. குமாரசாமி அறிவுறுத்தலின்படி ஒத்தி வைத்துள்ளோம். வேறு எந்த காரணமும் இல்லை.
மாநாடு நடக்கக்கூடிய புதிய தேதியை விரைவில் அறிவிப்போம். லோக்சபா கூட்டத்தொடரில் குமாரசாமி பங்கேற்று உள்ளதால், அவர் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
ம.ஜ.த., குறித்து அமைச்சர் செலுவராயசாமி கிண்டல் அடித்துள்ளார். இவரை போன்று, பலரை நாங்கள் பார்த்து உள்ளோம். தற்போது காங்கிரசில் பல குழப்பங்கள், பிரச்னைகள் உள்ளன. அதை சரி செய்வதை விடுத்து, ம.ஜ.த.,வில் உள்ள குழப்பம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
சித்தராமையா, சிவகுமார் ஆகிய இருவரில் யாருக்கு ஆதரவாக செயல்படுவது என்று அமைச்சர் செலுவராயசாமி குழப்பத்தில் உள்ளார். நிகிலுக்கு ம.ஜ.த., மாநில தலைவர் பதவி வழங்குவது குறித்து தேவகவுடாவே முடிவு எடுப்பார். காங்கிரசில் வாரிசு அரசியல் உள்ளது. நிகிலுக்கு பதவி கொடுத்தால் என்ன தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.