ADDED : பிப் 24, 2024 11:04 PM

பெங்களூரு: மாண்டியா 'சீட்' விவகாரம் தொடர்பாக, உறவினர்களுடன், எம்.பி., சுமலதா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதி யாருக்கு என்பதில், ஒவ்வொரு நாளும் 'சஸ்பென்ஸ்' அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போதைய எம்.பி., சுமலதா, பா.ஜ., 'சீட்' எதிர்பார்க்கிறார். பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருக்கும், ம.ஜ.த.,வும் மாண்டியாவை கேட்டு வருகிறது.
வேறு தொகுதியை கொடுக்க, பா.ஜ., மேலிடம் நினைத்தாலும், 'மாண்டியாவை விட்டுச் செல்ல மாட்டேன்' என, சுமலதா பிடிவாதம் பிடிக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, டில்லி சென்ற குமாரசாமி, அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, 'மாண்டியாவை ம.ஜ.த.,வுக்கு கொடுங்கள்' என்று கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள வீட்டில் வைத்து, உறவினர்கள், நலம் விரும்பிகள், ஆதரவாளர்களுடன் சுமலதா இன்று, முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மாண்டியா பா.ஜ., 'சீட்' நழுவினால் என்ன செய்வது என்றும், அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தும் விவாதிக்க உள்ளார்.
பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேசி வந்ததால், சுமலதா மீது, அமைச்சர் செலுவராயசாமி கோபத்தில் உள்ளார். சுமலதாவை காங்கிரசில் சேர்க்கவும், எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனால் சுமலதா காங்கிரஸ் கட்சிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பா.ஜ., 'சீட்' கை தப்பினால், சுமலதா மீண்டும் சுயேச்சையாக போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.