வன்முறைக்கு காரணமான தீர்ப்பை திரும்ப பெற்றது மணிப்பூர் கோர்ட்
வன்முறைக்கு காரணமான தீர்ப்பை திரும்ப பெற்றது மணிப்பூர் கோர்ட்
ADDED : பிப் 23, 2024 01:34 AM

இம்பால்: மெய்டி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கலாம் என கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கி, மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மெய்டி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து மணிப்பூர் அரசு பரிசீலிக்க வேண்டும் என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கூகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல், கலவரமாக மாறியது. இதற்கிடையே, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழங்குடியின அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 'பழங்குடியின பட்டியலில், மாற்றங்கள் செய்யவோ, புதிதாக சேர்க்கவோ நீதிமன்றத்தால் முடியாது. அது மத்திய அரசின் பொறுப்பு' எனக் கூறி, அந்தத் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் பழங்குடியினர் அமைப்பு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி கோல்மேய் கைபுல்ஷில்லுவின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'சட்டத்தின் மீதான தவறான புரிதலின் காரணமாக கடந்த மார்ச்சில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் உள்ளது. அதன்படி, முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பின் பத்தி எண் 17(3) நீக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது' என தீர்ப்பளிக்கப்பட்டது.