மணிப்பூர் டூ மும்பைக்கு யாத்திரைக்கு செல்லும் காங்., எம்.பி ராகுல்: பாஜ., "ரியாக்ஷன்"
மணிப்பூர் டூ மும்பைக்கு யாத்திரைக்கு செல்லும் காங்., எம்.பி ராகுல்: பாஜ., "ரியாக்ஷன்"
ADDED : ஜன 09, 2024 01:28 PM

புதுடில்லி: மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா வரை ராகுல் தலைமையில் மற்றொரு யாத்திரை நடத்த காங்., தலைமை முடிவு செய்துள்ளது. இது குறித்து, ''காங்.., எம்.பி ராகுலை நம் நாட்டில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை'' என பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்., முன்னாள் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான ராகுல் தலைமையில், 'பாரத் ஒற்றுமை யாத்திரை' கடந்த 2022 செப்., 7ல், தமிழகத்தின் கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை நடந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா வரை ராகுல் தலைமையில் மற்றொரு யாத்திரை நடத்த காங்., தலைமை முடிவு செய்தது. அதற்கு, 'பாரத் நியாய யாத்திரை' என, பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது: காங்.., எம்.பி ராகுலை நம் நாட்டில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாத்திரையில் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் கருத்துகளை ராகுல் தெரிவிக்க வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
இண்டி ஜோடோ யாத்திரைக்கு செல்லுங்க
பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறியிருப்பதாவது: சமீபத்தில் சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களை காங்கிரஸ் இழந்தது. இதனை சரி செய்ய தான் ராகுல் மீண்டும் யாத்திரையை துவங்குகிறார். காங்கிரஸ் கட்சியை மீண்டும் மக்கள் மனதில் கொண்டு செல்ல தான் யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இண்டியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை சரி செய்ய 'இண்டி ஜோடோ யாத்திரை' என்பது காலத்தின் தேவையாக உள்ளது. ராகுல் இந்த நியாய யாத்திரையை விட்டுவிட்டு 'இண்டி ஜோடோ யாத்திரைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.