ரூ. 2,000 கோடி வகுப்பறை ஊழல் வழக்கு மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு 'சம்மன்'
ரூ. 2,000 கோடி வகுப்பறை ஊழல் வழக்கு மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு 'சம்மன்'
ADDED : ஜூன் 04, 2025 08:38 PM
புதுடில்லி,:அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில், 2,000 கோடி ரூபாய் ஊழல் நடந்தது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு ஊழல் தடுப்புப் பிரிவு 'சம்மன்' அனுப்பியுள்ளது.
டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் நிதி மற்றும் கல்வித் துறைகளை அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நிர்வகித்தார். பொதுப்பணித் துறை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் பதவி வகித்தார்.
அவர்களுடைய பதவிக் காலத்தில், அரசுப் பள்ளிகளில், 12,000 க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் மற்றும் கட்டடங்கள் கட்டப்பட்டன.
இந்தக் கட்டுமானப் பணிகளில், 2,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் கபில் மிஸ்ரா, ஹரீஷ் குரானா, நீல்காந்த் பட்சி ஆகியோர், ஊழல் தடுப்புப் பிரிவில், 2019ம் ஆண்டு புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் ஏப்ரல் 30ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஊழல் தொடர்பான விசாரணைக்கு சத்யேந்தர் ஜெயின், 6ம் தேதியும், மணீஷ் சிசோடியா, 9ம் தேதியும் ஆஜராகுமாறு, ஊழல் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, ஊழல் தடுப்புப் பிரிவு இணைக் கமிஷனர் மது வர்மா கூறியதாவது:
இந்த ஊழல் புகார் விவகாரத்தில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின், தலைமை தொழில்நுட்ப ஆய்வாளர் அளித்துள்ள அறிக்கை மூன்று ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17--ஏ,யின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகே இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.