ADDED : மார் 15, 2024 06:58 AM

ஷிவமொகா: ''முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு, தைரியம் இருந்தால் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடட்டும்,'' என, மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆயனுார் மஞ்சுநாத் சவால் விடுத்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறும் அனைத்தும் பொய். இவர் 'பிளாக்மெயில்' அரசியல்வாதி. அவருக்கு யாரும் சீட் கிடைக்காமல் தடுக்கவில்லை. 40 சதவீதம் கமிஷனுக்கு, அவரே பலியாகி விட்டார். ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டதால், சட்டசபை, லோக்சபா இரண்டிலும் சீட் கை நழுவியது.
ஈஸ்வரப்பாவுக்கு தைரியம் இருந்தால், லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடட்டும். அவர் நிச்சயம் போட்டியிட மாட்டார். அவருக்கு அந்த தைரியம் இல்லை. அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? ஷிவமொகா மாவட்டத்தின், எந்த தாலுகாவில் அவருக்கு செல்வாக்கு உள்ளது. இவர் ஷிவமொகா நகருக்கு மட்டுமே தலைவர்.
அவர், மக்களுக்கு தேவையான தலைவர் என்றால், சுயேச்சையாக போட்டியிடட்டும். நான் அவருக்கே ஓட்டு போடுகிறேன். ஈஸ்வரப்பா கையில் எதுவும் இல்லை. இவர் தேச பக்தர் அல்ல. கபட நாடகமாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி வந்தால், அவரது காலில் விழுவார்.
இம்முறை ஷிவமொகா லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளர் கீதா சிவராஜ்குமார் வெற்றி பெறுவார். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஏற்கனவே யுத்தம் துவங்கிவிட்டது.
ஏழாவது ஊதிய ஆயோக் அறிக்கை தயாராகி வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும். அதன்பின் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதற்குள் ஊதிய ஆயோக், அறிக்கை தாக்கல் செய்யப்படும். இது பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

