நாளை நடைபெறுகிறது மன்மோகன் சிங் இறுதிச்சடங்குகள்! காங். அறிவிப்பு
நாளை நடைபெறுகிறது மன்மோகன் சிங் இறுதிச்சடங்குகள்! காங். அறிவிப்பு
UPDATED : டிச 27, 2024 05:20 PM
ADDED : டிச 27, 2024 07:01 AM

புதுடில்லி; மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நாளை(டிச.28) நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. காலை 9:30 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(வயது 92) வயது மூப்பு தொடர்பாக ஏற்பட்ட உடல்நலக் பாதிப்பால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (டிச.26) காலமானார்.
மன்மோகன் மறைவு குறித்து செய்தியறிந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பிரியங்கா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து நிலைமையை கேட்டறிந்தனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மன்மோகன் சிங் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் அவரது இறுதிச்சடங்குகள் நாளை(டிச.28) நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது;
அவரின்(மன்மோகன் சிங்) இறுதிச் சடங்குகள் நாளை(டிச.28) நடைபெறும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மன்மோகன் சிங் காங்கிரசுக்கும், நாட்டுக்கும் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர்.
சுதந்திர இந்தியாவின் கதாநாயகன். அவரது பணி, நாட்டை ஆண்ட திறனை அனைவரும் நன்கு அறிவர். காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளை காலை இறுதி ஊர்வலம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9:30 மணிக்கு நடக்கும் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது. காலை 8:30 மணிக்கு காங்., கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி நடக்கும் எனக்கூறியுள்ளது.