பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய்: மத்திய அரசு தகவல்
பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய்: மத்திய அரசு தகவல்
ADDED : ஆக 08, 2025 09:57 PM

சென்னை; பிரபலமான மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சி மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மாதம்தோறும் கடைசி ஞாயிறன்று ஒலிபரப்பாகும்.
வானொலி வழியாக உரையாற்றும் பிரதமர் மோடியின் பேச்சு, நாடு முழுவதும் மக்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந் நிலையில் இந்த மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மத்திய அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் எழுத்துப்பூர்வமான அளித்துள்ள பதில் மூலம் இந்த விவரம் வெளியாகி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளை பயன்படுத்தி ஆகாஷ்வாணியால் தயாரிக்கப்படுகிறது என்று அந்த பதிலில் அமைச்சர் எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.
மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.