தேர்தலுக்கு பின் மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்: பிரதமர் மோடி
தேர்தலுக்கு பின் மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்: பிரதமர் மோடி
ADDED : மார் 18, 2024 12:24 AM

அமராவதி: “மாநிலங்களின் விருப்பங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை முன்னெடுத்து செல்லும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, லோக்சபா தேர்தலுக்கு பின், தன் மூன்றாவது ஆட்சி காலத்தில், இன்னும் பல பெரிய முடிவுகளை எடுக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரமாண்ட கூட்டம்
ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள பொப்புடி கிராமத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது மோடி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விருப்பங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் வைத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்னோக்கி சென்று கொண்டுள்ளது.
உலகம் முழுதும், இந்த கூட்டணி அரசின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. தே.ஜ., கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு பின்னும், தன் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இன்னும் பல பெரிய முடிவுகளை எடுக்கும்.
இந்த கூட்டணியின் லட்சியமே, வளர்ந்த ஆந்திரா மற்றும் வளர்ந்த பாரதம் என்பதே. அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செல்வதே தே.ஜ., கூட்டணியின் சிறப்பு. ஆனால், காங்கிரஸ் கட்சியோ, கூட்டணி கட்சிகளை பயன்படுத்துவதையும், பின்னர் அவற்றை துாக்கி எறிவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது.
மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணி தலைவர்களின் நிலையை நீங்களே பார்க்கிறீர்கள். தேர்தலுக்கு பின் அவர்கள் எப்படி இருப்பர் என நீங்களே யூகிக்கலாம்.
ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி அமைச்சர்களிடையே ஊழல் செய்வதில் போட்டி நிலவுகிறது.
விரைவான வளர்ச்சி
இந்த கட்சியும், காங்கிரசும் ஒன்று தான்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான், இந்த கட்சி களை நடத்துகின்றனர். ஆந்திராவிலும், மத்தியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாநிலம் விரைவான வளர்ச்சியை பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தே.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நேற்றைய கூட்டத்தில் பிரதமருடன் பங்கேற்றார்.

