ADDED : ஆக 09, 2025 07:14 AM
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, விழுப்புரம், நாகப்பட்டினம் செல்ல இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் வைத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 332ஏ, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. அப்போது, மரக்காணம் - புதுச்சேரி இடையே, 46 கி.மீ., தொலைவுக்கு, 2,157 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
மரக்காணம் -- புதுச்சேரி நான்கு வழிச்சாலை நிறைவடைந்தால் அது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்தும்; வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கான புதிய வழிகளும் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -