விடாது துரத்தும் மொழி சர்ச்சை: கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட ராஜ் தாக்கரே
விடாது துரத்தும் மொழி சர்ச்சை: கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட ராஜ் தாக்கரே
ADDED : ஜூலை 09, 2025 08:32 AM

மும்பை: மராத்தி மொழி விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் எந்த கருத்துகளையும் கூறக்கூடாது என்று கட்சியினருக்கு ராஜ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார்.
மஹாராஷ்டிராவில் மும்மொழிக்கொள்கை அமல்படுத்தப்பட்டு, 3வது மொழி இந்தியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மாண் சேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பெரும் எதிர்ப்பு எழவே, மஹாராஷ்டிரா அரசு தனது அறிவிப்பை வாபஸ் பெற்றது. தங்களின் எதிர்ப்பால் இந்த வெற்றி கிடைத்ததாக கூறி, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இருவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக மேடையில் தோன்றினர்.
இந் நிலையில் மராத்தி மொழி விவகாரம் குறித்து தமது கட்சியினர் யாரும் பொதுவெளியில் விவாதங்களில் ஈடுபட ராஜ் தாக்கரே தடை விதித்துள்ளார். எந்த வகையிலும் தனிப்பட்ட கருத்துகளை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
ஊடகங்களுடன் தொடர்பு கொள்ளும் முன்பாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் தமது முன் அனுமதி அவசியம். தனிப்பட்ட முறையில் எந்த வீடியோக்களையும் யாரும் வெளியிடக்கூடாது என்று ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கட்சியினருக்கு திடீரென ராஜ் தாக்கரே எதற்காக இப்படியான ஒரு உத்தரவை வெளியிட்டார் என்று முன்னணி நிர்வாகிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.