ADDED : மார் 18, 2025 09:24 PM

புதுடில்லி:துவாரகாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 30 குடிசைகள், இரண்டு ஐஸ் கிரீம் தொழிற்சாலைகள் மற்றும் மளிகைக் கடைகள் எரிந்து சாம்பலாகின.
புதுடில்லி துவாரகா மோர் பகுதியில் உள்ள ஐஸ் கிரீம் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு தீப்பற்றியது. தீ மளமளவென பரவி, அங்கிருந்த குடிசைகள் மற்றும் மளிகை கடைகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து, 11 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி அதிகாலை 4:00 மணிக்கு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், 30 குடிசைகள், இரண்டு தொழிற்சாலைகள் மற்றும் மளிகைக் கடைகள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இந்தப் பகுதியில் 150 குடிசைகள் உள்ளன. இங்கு, கூலித் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். அதேபோல, ஐஸ்கிரீம் விற்பவர்களும் இங்கு வசிக்கின்றனர்.
தீயில் எரிந்து சாம்பலான ஒரு குடிசையில் வசித்த சசி தேவி, “தினமும் 150 முதல் 300 வரை கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். தீ வேகமாகப் பரவியதால் எங்கள் குடிசையில் இருந்த பொருட்களைக் கூட எடுக்க முடியவில்லை. மாற்று உடை கூட இல்லாமல் அனைத்தையும் இழந்து நிற்கிறோம்,”என்றார்.
அதேபகுதியில் வசிக்கும் குரியா என்ற பெண், “அதிகாலை 2:00 மணிக்கு ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் இருந்து புகை வருவதை பார்த்தேன். அங்குதான் முதலில் தீப்பற்றியுள்ளது. தீ மிக வேகமாக பரவியதால் குடிசைகளை விட்டு உடனடியாக வெளியேறினோம்,”என்றார்.
மளிகைக் கடை நடத்தும் சுசீலா, “குடிசைக்குள் இருந்து எந்தப் பொருளையுமே எடுக்கக் கூட நேரமில்லை. அந்தளவுக்கு தீ வேகமாகப் பரவியது. அனைத்தையும் இழந்து விட்டு தெருவில் நிற்கிறோம். அடுத்த வேளை உணவுக்குக் கூட கையேந்தும் நிலைக்கு வந்து விட்டோம்,”என்றார்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களின் ஆதார் அட்டைகள் மற்றும் பிற அடையாளச் சான்றுகள் போன்ற ஆவணங்கள் எரிந்து விட்டதாகவும், அவற்றை மீண்டும் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமானதால், தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்தும் சிலர் கவலை தெரிவித்தனர்.