ADDED : அக் 05, 2024 05:13 AM

மைசூரு: தசராவை ஒட்டி மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று, கோலப் போட்டி நடந்தது. திருமணமான பெண்கள், இளம்பெண்கள், கல்லுாரி மாணவியர் போட்டியில் கலந்து கொண்டு, உற்சாகமாக கோலம் போட்டு, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
மைசூரு தசராவின் இரண்டாவது நாளான நேற்று, அரண்மனை வளாகம், கோட்டை ஆஞ்சநேயா கோவில் முன், கோலப் போட்டி நடந்தது.
காலை 7:00 முதல் காலை 8:00 மணி வரை, ஒரு மணி நேரம் நடந்த போட்டியில், திருமணமான பெண்கள், இளம்பெண்கள், கல்லுாரி மாணவியர் கலந்து கொண்டு உற்சாகமாக கோலமிட்டனர். பல வண்ணங்களில் கோலம் போட்டு, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
கோல போட்டியை மைசூரு கிருஷ்ணராஜா தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சவா துவக்கி வைத்தார். பெண்கள் போட்ட கோலங்களை பார்த்து அசந்து போனார். கோலம் நன்றாக உள்ளது என, வெகுவாக பாராட்டினார். பல கோலங்கள் முன் நின்று, உற்சாகமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
'சிறந்த கோலத்தை தேர்வு செய்து பின்னர் பரிசு வழங்கப்படும்' என, போட்டி நடத்திய குழுவினர் தெரிவித்தனர்.