வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றாலும் மகப்பேறு விடுப்பு எடுக்கலாம்: ஒடிசா அரசு அறிவிப்பு
வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றாலும் மகப்பேறு விடுப்பு எடுக்கலாம்: ஒடிசா அரசு அறிவிப்பு
ADDED : செப் 28, 2024 12:02 AM

புவனேஸ்வர்: வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் பெற்றோருக்கு மகப்பேறு விடுப்பு வழங்குதல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ஒடிசா அரசு நேற்று வெளியிட்டது.
180 நாட்கள் விடுமுறை
குழந்தை பெற முடியாத தம்பதி, வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெறும் நடைமுறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. வாடகைத்தாய் மற்றும் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு மகப்பேறு விடுப்பு வழங்குதல் தொடர்பான சட்ட திருத்தத்தை மத்திய அரசு கடந்த ஜனவரியில் மேற்கொண்டது.
இந்நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒடிசா அரசு நேற்று வெளியிட்டது.
அதில் கூறியுள்ளதாவது:
வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ளும், அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு, 180 நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.
ஒப்பந்தம்
வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண் அரசு ஊழியராக இருந்தால், அவருக்கும் ஆறு மாத கால விடுமுறை கொடுக்கப்படும்.
மேலும், வாடகைத்தாய் வாயிலாக பிறக்கும் குழந்தையின் தந்தை அரசு ஊழியராக இருந்தால், 15 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படும். குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள் இந்த விடுமுறையை அவர் எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டு குழந்தைகளை பெறுவதற்கு மட்டுமே இந்த விடுப்பு சலுகை பொருந்தும். மகப்பேறு விடுப்பு கோரும்போது, வாடகைத்தாய் முறைக்கான ஒப்பந்தம், மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.