ADDED : பிப் 29, 2024 11:10 PM

சக்தி தேவதையாக அமர்ந்துள்ள மாவத்துாரம்மா, தன்னை நம்பி வரும் பக்தரின் சங்கடங்களை தீர்த்து வைக்கிறார். இவரின் அருளை பெற, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
மைசூரு கே.ஆர்., நகர் மாவத்துாரம்மா கோவிலை பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூரு மற்றும் குடகு பகுதி மக்கள், இந்த அம்மனின் பக்தர்கள் ஆவர். அவ்வப்போது கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து பூஜைகள் செய்வது வழக்கம்.
காவல் தெய்வம்
கர்நாடக 'காவல் தெய்வமாக' கருதப்படும், சாமுண்டீஸ்வரியின் சகோதரியான மாவத்துாரம்மா, பசுமையான வயல்களுக்கு நடுவில், அமைதியான சூழ்நிலையில் குடிகொண்டுள்ளார். கே.ஆர்.நகரில் இருந்து 8 கி.மீ.,; ஹுன்சூரில் இருந்து 12 கி.மீ.; குடகில் இருந்து 12 கி.மீ., துாரத்தில் கோவில் அமைந்துள்ளது.
மாவத்துார் கிராமத்தில் நுழைந்ததும், கண்களில் தென்படும் அழகான நுழை வாயில், மாவத்துார் கோவிலுக்கு செல்ல வழி காண்பிக்கும். இங்கிருந்து ஒரு கி.மீ., சென்றால், கோவிலை அடையலாம்.
சாலையின் வலதுபுறத்தில், தாழ்வான பகுதியில், ஊஞ்சல் மண்டபம், கற்களால் கட்டப்பட்ட கோவில் தென்படும். இது பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அதன்பின் கோவில் மேம்படுத்தப்பட்டது.
கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பூஜை நடக்கும். பக்தர்கள் ஆடு, கோழிகளை கொண்டு வந்து பூஜித்து, அவற்றை பலி கொடுப்பர்.
அதன் பின் கறி சமைத்து, அம்மனுக்கு படைத்த பின் ஊருக்கு திரும்புவது வழக்கம்.
எருமை மாடு பலி
சக்தி தேவதையான மாவத்துாரம்மன், உக்ரமான வடிவெடுத்து துஷ்ட அரக்கனை சம்ஹாரம் செய்ததாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தன் கோபம் தணிந்து சாந்தமடைய வேண்டுமானால், எருமை மாட்டை பலி கொடுக்க வேண்டும் என, கேட்கிறாராம்.
எனவே அந்த காலத்தில் எருமையை காணிக்கை செலுத்தினர். இப்போதும் எருமையை காணிக்கையாக செலுத்துகின்றனர் என்றாலும் பலி கொடுப்பதில்லை. எருமைகளை பூஜித்து, கோவிலில் ஒப்படைக்கின்றனர்.
ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ஏழு ஊர்களின் மக்கள் ஒன்று சேர்ந்து, பூஜை செய்து அம்மனை வேண்டுவர்.
அப்போது 9 வயது சிறுமி மீது, அம்மன் அருள் வந்து திருவிழாவை எப்படி நடத்த வேண்டும் என, உத்தரவிடுவார். அதன்படியே திருவிழா நடக்கும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
மாவத்துாரம்மா குறித்து, பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு முறை தாயிடம் இருந்து பிரிந்த குழந்தை ஒன்று, அம்மனின் சன்னிதானத்திற்கு வருகிறது.
குழந்தை தாயை தேடி அழுகிறது. அப்போது அம்மன் சர்ப்ப வடிவில் வந்து, குழந்தைக்கு விளையாட்டு காண்பித்து, சமாதானம் செய்தார். குழந்தையின் தாயை கோவிலுக்கு வர செய்தார்.
அம்மனுக்கு வேண்டுதல்
குழந்தை கோவிலில் இருப்பதை பார்த்து, மகிழ்ச்சியடையும் தாய், அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றுகிறார். அப்பகுதி மக்களுக்கு உணவு சமைத்து பரிமாறிவிட்டு தன் குழந்தையுடன் ஊருக்கு திரும்புகிறார்.
மற்றொரு அதிசயமும் நடந்துள்ளது. குடகில் பக்தர்கள் மாவத்துாரம்மாவுக்கு நேர்ந்து விடப்பட்ட எருமை மாட்டின் தலையில் தண்ணீர் தெளித்து வேண்டினால், அந்த மாடு அங்கிருந்து புறப்பட்டு நேராக மாவத்துாரம்மா சன்னதிக்கு வந்து விடுமாம்.
வாழ்க்கையில் பல சங்கடங்களை அனுபவிக்கும் மக்கள், மாவத்துாரம்மா சன்னதிக்கு வந்து வேண்டி, பூஜை செய்தால், சங்கடங்கள் தீர்ந்துவிடும் என, பக்தர்கள் நம்புகின்றனர். எனவே செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, வேண்டுதல் வைக்கின்றனர்.
- நமது நிருபர் -

