உங்க ஆட்சி இருந்தப்போ ஏன் அதை செய்யலை: ராகுலை கேட்கிறார் மாயாவதி
உங்க ஆட்சி இருந்தப்போ ஏன் அதை செய்யலை: ராகுலை கேட்கிறார் மாயாவதி
ADDED : ஆக 25, 2024 01:32 PM

புதுடில்லி: 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை' என ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பி உள்ளார்.
'நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடத்துவோம். இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம்' என ராகுல் திட்டவட்டமாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து, சமூக வலைதளத்தில் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கை:
முக்கியம்
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை. இப்போது அதைப் பற்றிப் பேசுகிறார்களே, பதில் சொல்லுங்கள்? அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சி எப்போதுமே அதற்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. எங்களுக்கு நலிவடைந்த பிரிவினரின் நலன் முக்கியம். பட்டியலின மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் மவுனம் காக்கின்றனர்.
எச்சரிக்கை
காங்கிரஸ் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. இடஒதுக்கீடு தொடர்பான அவர்களின் அறிக்கைகளில் இருந்து அவர்கள் நிலை என்ன என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் மவுனம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான சிந்தனையை தான் காட்டுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.