UPDATED : ஆக 11, 2024 01:49 PM
ADDED : ஆக 11, 2024 01:41 PM

புதுடில்லி: 'பதக்கம் வாங்கவில்லை என்றாலும், நாட்டுக்காக வினேஷ் போகத் செய்ததை யாரும் மறந்துவிட வேண்டாம்' என இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.
100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் மகளிர் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரி, அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.
நீரஜ் சோப்ரா சொல்வது என்ன?
இந் நிலையில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவும், வினேஷ் போகத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
மறக்க கூடாது...!
இப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவருக்கு பதக்கம் கிடைத்திருக்கும். பதக்கங்களை வென்றால் நம்மை சாம்பியன் என்று அழைப்பார்கள். வாங்காதவர்களை மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். பதக்கம் வாங்கவில்லை என்றாலும், நாட்டுக்காக வினேஷ் போகத் செய்ததை யாரும் மறந்துவிட வேண்டாம் இவ்வாறு அவர் கூறினார்.