கிரிக்கெட்டை ரசித்தபோது விபரீதம்: இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன்
கிரிக்கெட்டை ரசித்தபோது விபரீதம்: இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன்
ADDED : ஏப் 13, 2025 09:36 PM

மீரட்: உ.பி.யில் பிரிமியர் லீக் கிரிக்கெட்டை டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்த போது 13 வயது சிறுவன், 18 வயது இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
மீரட்டில் கஜூரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தமது பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான். போகும் போது தமது தாத்தா உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியையும் எடுத்துச் சென்றிருக்கிறான்.
சிறுவன் சென்ற வீட்டில் 18 வயது இளைஞன் முகமது கைப் என்பவர் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வெளியே சென்று விட்டனர். முகமது கைபோ சுவாரசியமாக டி.வி.யில் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது தாம் கொண்டு சென்ற துப்பாக்கியை முகமது கைப் முன் நீட்டிய சிறுவன் விளையாட்டு காட்டியுள்ளான். எதிர்பாராத விதமாக அவனின் விரல் விசையை அழுத்திவிட, துப்பாக்கியில் இருந்து குண்டு முகமது கைப் மீது பாய்ந்துள்ளது.
இதில் முகமது கைப் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர். முதல் கட்ட விசாரணையில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்துள்ளது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே அனைத்தும் தெரிய வரும் என்றும் கூறினர்.