ADDED : நவ 11, 2024 05:15 AM
மேகதாது அணை திட்டத்தை வைத்து, சென்னப்பட்டணாவில் அரசியல் படுஜோராக நடக்கிறது.
கர்நாடகாவின் குடகு மாவட்டம், தலக்காவிரியில் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆற்றின் குறுக்கே மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடி கிராமத்தில் கே.ஆர்.எஸ்., அணை உள்ளது.
இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கர்நாடகா-, தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது. பெங்களூரின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
ஆணையம்
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை நல்லபடியாக பெய்தால், அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஆனால், சரியாக மழை பெய்யா விட்டால், இரு மாநிலங்களுக்கும் இடையில் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது.
இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பிரச்னையை தீர்க்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் தமிழகத்தில் கடலில் வீணாக கலப்பதாக, கர்நாடகா குற்றம் சாட்டுகிறது.
இந்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே ராம்நகரின் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட, கடந்த 2017ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்த, தற்போதைய துணை முதல்வர் சிவகுமார் மேகதாது திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
பாதயாத்திரை
ஆனால், 2018ல் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பின் மேகதாது அணை திட்டம் பற்றி யாரும் பேசவில்லை. இந்நிலையில் மேகதாதில் அணை கட்டும் திட்டத்தை, பா.ஜ., நிறைவேற்ற வலியுறுத்தி, சங்கமாவில் இருந்து பெங்களூரு வரை காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தியது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின், மேகதாதில் அணைகட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பா.ஜ., குற்றம் சாட்டி வருகிறது.
இறுதி மூச்சு
இந்நிலையில், ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், மேகதாது அணையை வைத்து அரசியல் படுஜோராக நடக்கிறது.
'நான் கேட்கும் கோரிக்கைகளை இதுவரை பிரதமர் மோடி நிறைவேற்றி கொடுத்துள்ளார். என் இறுதி மூச்சை விடுவதற்குள், பிரதமர் மோடியிடம் மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற்று தருவேன்' என தேவகவுடா கூறினார்.
'மேகதாது திட்டத்தை காங்கிரசால் செயல்படுத்த முடியாது. இடைத்தேர்தலில் நிகில் வெற்றி பெற்றால் ராஜ்யசபா, லோக்சபாவில் போராடி திட்டத்தை நிறைவேற்றுவேன்' என்றும் கூறினார்.
தி.மு.க.,
தேவகவுடா பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருக்கும் ம.ஜ.த.,வுக்கு தைரியம் இருந்தால் பிரதமர் மோடியிடம் பேசி, மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற்று தரட்டும்' என்று சவால் விடுத்து உள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுத்து, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறுகையில், 'தமிழக தி.மு.க., அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் கூட்டாளிகள்.
மேகதாது திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள் என, தி.மு.க.,விடம், இங்கு உள்ள காங்கிரஸ் அரசு கேட்க வேண்டும். மத்திய அரசிடம் அனுமதி வாங்கி கொடுப்பது எங்கள் பொறுப்பு' என்றார்.
மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படும் இடம், கனகபுரா தாலுகாவில் உள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் சென்னப்பட்டணா, கனகபுராவுக்கு பக்கத்து தொகுதியாகும்.
இதனால், மேகதாது திட்டத்தை கையில் எடுத்து அரசியல் செய்கின்றனர். இதன் மூலம் யாருக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
. --- நமது நிருபர் --